யாழில் டெங்கு பரவும் அபாயம் : வலி கிழக்குப் பிரதேச சபையின் அதிரடி நடவடிக்கை!!!

யாழில் டெங்கு பரவும் அபாயம் உள்ளதையடுத்து கழிவகற்றும் பொறிமுறையினை துரிதமாக மேற்கொள்ளும் வகையில் வலி கிழக்கு பிரதேச சபையின் கழிவு அகற்றுதலுடன் தொடர்புடைய பணியாளர்கள் அனைவரினதும் விடுமுறைகள் இரத்துச் செய்யப்படுவதாக வலி கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

இது குறித்து கருத்து வெளியிட்ட வலி கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் அவர்கள் "டெங்கு நுளம்பிற்கான புகை அடித்தல் நடவடிக்கைகாக பொது சுகாதார வைத்திய அதிகாரியினால் கோரிக்கை விடுக்கும் அளவிற்கு எமது சபை எரிபொருட்களை தாமதமின்றி வழங்கி வருகின்றது எனவும்,டெங்கு பிரச்சார நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றது. அப் பிரச்சாரங்களையும் அதிகரிக்கின்றோம். சகல தரப்புக்களின் ஒத்துழைப்புடனேயே நாம் ஏற்பட்டிருக்கின்ற டெங்கு பரவுதலை கட்டுப்படுத்த முடியும். எமது பரந்த நிலப்பரப்பினையும் அதிகளவான மக்களையும் கொண்ட பிரதேச சபையில் கழிவு அகற்றுவதில் பல்வேறுபட்ட இடர்பாடுகள் உள்ளன. ஆளணிப்பற்றாக்குறை, வாகனப்பற்றாக்குறை என பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றோம்.

நிரந்தர நியமனம் செய்யப்படவேண்டிய தொழிலாளர்களுக்கான நேர்முகத்தேர்வுகளை நடாத்திவிட்டு அவர்களது நியமனம் தொடர்பான அரச நிர்வாகப் நடைமுறைகளுக்காகக் காத்திருக்கின்றோம். இவ்வாறான நிலையில் வெளிவாரிப்பணியாளர்களையே நாம் அதிகளவில் சுத்திகரிப்புப் பணிகளுக்காக பயன்படுத்தவேண்டியுள்ளது. பொதுவில் வெளிவாரிப் பணியாளர்களை விடுமுறைகள் ரீதியாக கட்டுப்படுத்துவதில் கஸ்டங்கள் இருக்கின்றன. எது எவ்வாறிருந்தபோதும் நாம் தற்போதைய அவசர சூழ்நிலையினைக் கருத்தில் கொண்டு சுத்திகரிப்புடன் தொடர்புடைய சகலரினதும் விடுமுறைகளை இரத்துச் செய்துள்ளோம்.

பிரதேச சபைகள் கழிவகற்றும் பொறிமுறையில் எதிர்கொள்ளும் சாவால்களின் அடிப்படையில் பரந்த காணிகளை கொண்டிருப்போர் சுயமாகவே கழிகளை உரிய வகையில் சுற்றுச்சுழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அப்புறப்படுத்தி ஒத்துழைக்க முடியும்.

கழிவு அகற்றுதலில் பிரதேச சபைகள் உணவுக்கழிவுளை அகற்றுவதற்கான கடப்பாட்டினைக் கொண்டுள்ளன. சிலர் தமது தோட்டங்களில் வெட்டப்படும் வாழைகளைக்கூட தெருவில் போட்டு விட்டு பிரதேச சபைகள் அவற்றினை அகற்ற வேண்டும் என நினைக்கின்றனர். 

கழிவுப்பொருள் முகாமைத்துவம் பற்றி மக்களும் அதிகளவில் பொறுப்படைய வேண்டியதை உணர்கின்றோம். கழிவுகளை வீதிகளில் வீசுவோர், உரிய பெறிமுறையின்றி கழிவகற்றலில் செயற்படுவோருக்கு எதிராக பொது நன்மையினைக் கருத்தில் கொண்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post