கோட்டாபாய ராஜபக்சவை ஜனாதிபதியாக தெரிவு செய்வதன் மூலம் நாட்டை அபிவிருத்தி அடைந்த நாடாக கட்டியெழுப்ப முடியும்-காதர் மஸ்தான்.

 இந்த நாட்டை அபிவிருத்தி செய்து மக்களை சுபீட்சமாக வாழ வைக்க உறுதி பூண்டுள்ள கோட்டாபாய ராஜபக்ச அவர்களை எதிர்வரும் பதினாறாம் திகதி இந்த நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்வதன் மூலம் இந்த நாட்டை அபிவிருத்தி அடைந்த நாடாக கட்டியெழுப்ப முடியும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ காதர் மஸ்தான் தெரிவித்தார்.

நேற்று மன்னாரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

போரினால் பாதிக்கப்பட்ட எமது நாட்டை அபிவிருத்தி செய்வோம் என ஆட்சிபீடமேறிய நல்லாட்சி அரசாங்கம் இந்த நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்ததை தவிர வேறு எதனைத்தான் செய்தது என்பதை பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

அபிவிருத்திகளை இல்லாமல் ஆக்கி இந்த நாட்டின் பொருளாதாரத்தை அவர்கள் சீர்குலைத்தார்கள்.இந்த நிலைமை மாற்றப்பட வேண்டுமாயின் நிலையான தலைமைத்துவத்தை வழங்கக் கூடிய தலைமையாக கோட்டாபாய ராஜபக்ச அவர்களை நாம் ஜனாதிபதியாக்க வேண்டும்.

இன்று சஜித் பிரேமதாசாவை வைத்து சிலர் தமது அரசியல் வங்குறோத்து நிலையை மறைக்க முற்படுகிறார்கள்.

வன்னி மாவட்டத்தில் இந்த நிலை தத்ரூபமாகவே தெரிகிறது. இவ்வாறனொரு மாயையை ஏற்படுத்தி மக்களை ஏமாற்ற இவர்கள் முற்படுகின்றனர்,

ஆனால் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்பதை அதிகமான மக்கள் எமக்குப் பின்னால் அணி வகுத்துள்ளதை பார்க்கும் போது உணர்ந்து கொள்ள முடிகிறது.

இந்த நாட்டில் அபிவிருத்தி வசந்தங்களை செய்தவர்கள் குறிப்பாக இந்த வன்னி மாவட்டத்தில் அதிகமான அபிவிருத்திகளை செய்தது மஹிந்தவுடைய அரசாங்கம் தான் என்பதை யாரும் மக்களுக்கு விளக்கிக் கூற வேண்டிய அவசியம் இல்லை.

இந்த அபிவிருத்தியின் தொடர்ச்சியை காணுவதற்கு எதிர்வரும் பதினாறாம் திகதி மக்கள் மிக நிதானமாக மொட்டு சின்னத்தில் போட்டியிடும் கோட்டாபாய ராஜபக்ச அவர்களுக்கு வாக்களித்து இந்த வரலாற்று வெற்றியின் பங்காளர்களாக நாமும் மாற வேண்டும்.

அதன்மூலம் எமது பகுதிகளின் அபிவிருத்தி,வேலைவாய்ப்புக்கள் என்பனவற்றை எமது மாவட்ட மக்களும் அதிகமாக பெறுவதற்கு ஏதுவான நிலை உருவாகும்.

இதை எதிர்வரும் பதினாறாம் திகதி இந்த நாட்டில் ஏற்படும் அரசியல் மாற்றத்துடன் எமது மக்கள் அனுபவிக்கக் கூடியதாக விருக்கும் எனவும் குறிப்பிட்டார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post