ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிறேமச்சந்திரன் கோத்தபாயவிற்கு வாழ்த்து!!!
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிறேமச்சந்திரன் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையின் முழுவிபரம் வருமாறு:
தமிழ் மக்களின் தீர்ப்பை ஏற்று புதிய ஜனாதிபதி தேசிய இனப் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் கடந்த 16.11.2019 அன்று நடைபெற்றது.
இதில் புதிய ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு தமது வாழ்த்துக்களையும் தமிழ் மக்கள் ஓரணியில் நின்று தமது கோரிக்கைகளை முன்வைத்து அதனைத் தீர்ப்பதற்கான ஆணையையும் வழங்கியுள்ளனர்.
இலங்கையின் எட்டாவது ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அவர்கள் மிக அமோகமான சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று இந்த நாட்டின் ஜனாபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சிங்கள மக்களின் ஜனநாயகபூர்வமான வாக்களிப்பையும் அதனூடாக திரு.கோத்தபாய ராஜபக்ச பெற்றுக்கொண்ட வெற்றியையும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சார்பாகவும் தமிழ் மக்கள் சார்பாகவும் நாங்கள் வாழ்த்தி வரவேற்கின்றோம்.
தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக நீண்டகாலம் போராடி வந்துள்ளனர். அந்தப் போராட்டத்தில் அவர்கள் பல பாரிய இழப்புக்களைச் சந்தித்துள்ளனர். அது மட்டுமன்றி, போராட்ட காலகட்டத்தில் பல்வேறுபட்ட அரசுகளினூடாக பல கசப்பான அனுபவங்களையும் எதிர்கொண்டுள்ளனர்.
ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டாலும், தமிழ் மக்கள் முன்வைத்த நியாயமான கோரிக்கைகளுக்கு இன்னமும் தீர்வு எட்டப்படவில்லை. அவ்வாறான கோரிக்கைகளை முன்வைத்து அதற்கான ஒரு மக்கள் ஆணையை வெளிப்படுத்தும் முகமாகவே தமிழ் மக்கள் ஒன்று திரண்டு வாக்களித்திருக்கின்றார்கள்.
ஆகவே தமிழ் மக்களின் ஜனநாயக தீர்ப்பை கௌரவித்தும் மதித்தும் எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு புதிய ஜனாதிபதி தன்னால் இயன்ற நடவடிக்கைகளை எடுப்பார் என்று எதிர்பார்க்கின்றோம்.
தமிழ்த் தேசிய இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கும் யுத்தத்தினால் ஏற்பட்ட ஏனைய பல்வேறுபட்ட பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் புதிய ஜனாதிபதி எடுக்கக்கூடிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தனது ஒத்துழைப்பினை வழங்கும்.
தமிழ் மக்கள் தங்களது கோரிக்கைகளுக்காக ஒன்றுதிரண்டு வாக்களித்தமைக்கு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தனது இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.
No comments