பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரில் முழு பலத்துடனான இலங்கை அணி!!

பாகிஸ்தானுக்கு எதிராக டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை முன்னிட்டு முழுப் பலத்துடனான இலங்கை கிரிக்கெட் குழாம் பெயரிடப்பட்டுள்ளது.


இந்தத் தொடரானது ஐ.சி.சி. டெஸ்ட் வல்லவர் தொடராகவும் அமைகின்றது. பாகிஸ்தானுக்கு எதிராக செப்டெம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெற்ற இருவகை சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தொடர்களைக் கைவிட்ட சமகால அணித் தலைவர் திமுத் கருணாரட்ன, முன்னாள் தலைவர்களான ஏஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால், சுரங்க லக்மால் உட்பட எண்மர் 16 வீரர்களைக் கொண்ட டெஸ்ட் தொடருக்கான குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளனர்.

இலங்கை அணி எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ஆம் திகதி பாகிஸ்தான் நோக்கி பயணமாகவுள்ளது. நியூஸிலாந்துக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் மாதம் இங்கு நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சுழல்பந்துவீச்சாளர் அக்கில தனஞ்சயவுக்குப் பதிலாக சேர்த்துக்கொள்ளப்பட்ட கசுன் ரஜித்த மீண்டும் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

ஐ.சி.சி. விதிகளுக்கு முரணான பந்துவீச்சுப் பாணியைக் கொண்டுள்ளார் என்ற காரணத்துக்காக அக்கில தனஞ்சய தற்போது ஒரு வருடத் தடையை எதிர்கொண்டுள்ளார். பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போடடி ராவல்பிண்டியில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சியில் டிசம்பர் மாதம் 19ஆம் திகதி ஆரம்பமாகும்.

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் பயணம் செய்த பஸ்வண்டி மீது லாகூரில் 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்பட்ட தாககுதலின் பின்னர் பாகிஸ்தானில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவில்லை. தாக்குதல் நடத்தப்பட்டு 20 வருடங்களின் பின்னர் பாகிஸ்தானில் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளதுடன் அப் போட்டியில் இலங்கை விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இலங்கை குழாம்: திமுத் கருணாரட்ன (அணித் தலைவர்), ஓஷத பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால், குசல் பெரேரா (விக்கெட் காப்பாளர்), லஹிரு திரிமான்ன, தனஞ்சய டி சில்வா, நிரோஷன் திக்வெல்ல, டில்ருவன் பெரேரா, லசித் எம்புல்தெனிய, சுரங்க லக்மால், லஹிரு குமார, விஷ்வா பெர்னாண்டோ, கசுன் ரஜித்த, லக்ஷான் சந்தகேன்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post