மலையக மக்கள் பற்றி பேசுவதற்கு அதாவுல்லாவிற்கு எவ்வித அருகதையும் கிடையாது-பழனி திகாம்பரம்.

முஸ்லீம் சமூகத்தை காட்டிக்கொடுத்து வயிற்றுப் பிழைப்பு நடத்தும் ஏ.எல்.எம். அத்தாவுல்லாவிற்கு மலையக மக்கள் பற்றி பேசுவதற்கு எவ்வித அருகதையும் கிடையாது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சருமாகிய பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

மலையக மக்களை தோட்டக்காட்டான் என இழிவாக பேசிய அத்தாவுல்லாவை வன்மையாக கண்டிப்பதாகவும் தொடர்ச்சியாக இவ்வாறு பேசினால் மலையக மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டியது வரும் எனவும் பழனி திகாம்பரம் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,

இந்த நாட்டில் சிறுபான்மை மக்களாகிய வட கிழக்கு தமிழர்கள், மலையகத் தமிழர்கள், முஸ்லிம்கள் ஆகியோர் ஒற்றுமையாகவும் இணக்கப்பாட்டுடனும் சுமூகமான உறவுடனும் வாழ்ந்து வரும் நிலையில் முஸ்லிம் மக்களின் தலைவர்களான முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் ஆகியோர் இவ்வாறு ஒருபோதும் மலையக மக்களை கீழ்த்தரமாக பேசியதில்லை. 

ஆனால் இந்த ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் ஆகிய தலைவர்களுடன் இருந்து ஒட்டு மொத்த முஸ்லிம் மக்களையும் காட்டிக் கொடுத்து வயிற்றுப் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் அத்தாவுல்லா போன்றவர்கள் இவ்வாறு பேசுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மலையக மக்கள் இன்று இந்த நாட்டில் கௌரவம் மிக்க மக்களாக வாழ்ந்து வரும் நிலையில் அந்த மக்களின் கௌரவத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் பேசினால் என்ன நடக்கும் என்பதை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அவர்கள் நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிரூபித்து காட்டியுள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணி எப்போதும் மலையக மக்களின் முன்னேற்றத்திற்காகவும் அவர்களை கௌரவமான நிலைக்கு கொண்டு செல்லவும் அர்ப்பணிப்புடன் செயல்படும் என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும். 

ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் மாத்திரமே மலையக மக்கள் பற்றி சிந்திக்க வேண்டும் என்றில்லை. ஆனாலும் மலையக மக்களுக்கு இவ்வாறான இழிநிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே கடந்த அரசாங்கத்தில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் பேரம்பேசி 'தோட்டம்' என்ற சொல்லை அகற்றி 'மலைநாடு' என்ற கௌரவமான அடையாளத்தை ஏற்படுத்தி மலைநாட்டு புதிய கிராமங்கள் என்ற அமைச்சை உருவாக்கி அதன் மூலம் மலையக மக்களுக்கு கௌரவமான சேவைகளை செய்து வந்தோம். 

ஆனால் சிலர் தங்களுடைய சுயநலத்திற்காகவும் சுயலாபத்திற்காகவும் வறட்டு கௌரவத்திற்காகவும் 'மலைநாடு' என்ற பெயரை மாற்றி தற்போதைய இடைக்கால அரசாங்கத்தில் மீண்டும் 'தோட்டம்' என்ற சொல்லைப் பயன்படுத்தி மலையக மக்களுக்கு அமைச்சு ஒன்றை பெற்றிருப்பது வருத்தமளிக்கிறது. 

நான்கரை வருடங்கள் முன்னோக்கி சென்ற மலையக சமூகம் தற்போது பின்னோக்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்தாவுல்லா போன்றவர்கள் இவ்வாறு மலையக மக்களை ஏளனமாகப் பேசுவதற்கு மலையக மக்கள் மத்தியில் இருக்கின்ற சில அரசியல்வாதிகளும் பொறுப்புக் கூறவேண்டும். 

காரணம் கடந்த வாரத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் மலையக மக்களை கல்வியறிவு இல்லாதவர்கள் என்று மலையகத்தைச் சேர்ந்தவர்களே இழிவாக பேசினர். நாங்கள் அதனையும் வன்மையாக கண்டிக்கிறோம். 

இன்று மலையக இளைஞர்கள் மத்தியிலும் இந்த தரக்குறைவான வார்த்தைகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே யாராக இருந்தாலும் சரி மலையக மக்களின் கோபத்திற்கு ஆளாகி விடவேண்டாம் என எச்சரிக்கிறேன். இனிவரும் காலங்களில் யாரேனும் மலையக மக்களை இழிவாக பேசினால் அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டப்படும் என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post