மக்களுக்கு அவர்களின் சொத்துக்களை மீண்டும் பெற்றுக்கொடுப்பதே எமது முதல் பணி- அனுர.

நாம் ஆட்சிக்கு வந்தால் செய்ய வேண்டிய பல விடயங்கள் உள்ளதாகவும், அரசாங்கமாக தீர்மானம் எடுக்கும் வேளையில் தேசிய மக்கள் சக்தியின் அரசியல் குழு செயற்படும் எனவும் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக தெரிவித்துள்ளார்.

மக்கள் சொத்துக்களை களவெடுத்த கள்ளர்களிடம் இருந்து மக்களுக்கு அவர்களின் சொத்துக்களை மீண்டும் பெற்றுக்கொடுப்பதே எமது முதல் பணியாக உள்ளது. அதேபோல் மக்களுக்கு முதலில் சலுகைகளை பெற்றுக்கொடுக்க வேண்டும். ஆட்சிக்கு வந்ததுடன் ஆட்சியாளர்கள் எவ்வளவு சொத்துக்களை சுருட்டிக்கொள்ளலாம் என முயற்சிக்கும் கலாசாரத்தை நாம் முற்றாக நிறுத்துவோம்.

சுகபோக வாழ்கையை நாம் வாழ முன்னர் எம்மை ஆதரிக்கும் எமது மக்களுக்கு அதே வாழ்கையை கொடுக்க வேண்டும். எமது மக்கள் முகங்களில் மகிழ்ச்சியை பார்க்கவே நாம் விரும்புகின்றோம்.

மாறாக கோவங்கள், குரோதங்கள், வெறுப்பு, இனவாதம் மதவாதம் மூலம் அரசியல் செய்ய நாம் ஒருபோதும் தயாரில்லை. இப்போது வரையில் நாட்டில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டுமே தவிர பிரச்சினைகளை மேலும் பிரச்சினையாக்க நாம் தயாரில்லை.

எமது நாட்டில் இன்றைய அரசியல் கலாசாரம் அரசியலை தாண்டி கலாசார மோதலாக அல்லது மத இன மோதலாக மாறிவிட்டது. இதனை மாற்ற வேண்டும் என்ற முயற்சிகளை எடுத்துள்ளோம். மக்களின் மனங்களை மாற்ற வேண்டும். இது முரண்பாட்டு வாதங்களினால் ஒருபோதும் முடியாது.

இந்த நாட்டில் ராஜபக்ஷக்கள் மீதான பயம் இன்றும் நாட்டில் உள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு ராஜபக்ஷக்களை தோற்கடிக்க வேண்டும் என வந்து அவர்களை தோற்கடித்தவர்கள் மீண்டும் ராஜபக்ஷக்களையே பாதுகாத்தனர். இன்று மீண்டும் ராஜபக்ஷக்களை தோற்கடிக்க வேண்டிய போராட்டம் உள்ளது.

அதனுடன் சேர்த்து விக்ரமசிங்கவையும் தோற்கடிக்க வேண்டும் என்ற போராட்டத்தை நாம் கையில் எடுத்துள்ளோம். கடந்த ஐந்து ஆண்டுகளில் ராஜபக்ஷக்களை ஐக்கிய தேசிய கட்சியினர் எவ்வாறு பாதுகாத்தனர் என்பது எமக்கு நன்றாகவே தெரியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.