"இந்தியாவுடன் நெருக்கமாக இணைந்தே பணியாற்ற விரும்புகிறோம்" ஜனாதிபதியின் முதலாவது பேட்டி!!

"நாங்கள் இந்தியாவுடன் மிக நெருக்கமாக பணியாற்ற விரும்புகிறோம். அதேபோல, சீனாவுடனும் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம்.

இராஜதந்திர உறவுகள் மற்றும் பொருளாதார உறவுகள் எல்லா இடங்களிலும் உள்ளன. இந்தியா சீனாவுடன் நெருக்கமாக செயல்படுகிறது. இந்திய முதலீடு சீனாவுக்குச் செல்கிறது என்பது எனக்குத் தெரியும், சீன முதலீடு இந்தியாவுக்கு வருகிறது. அதைப் போலவே, நாங்கள் முதலீடுகளையும் உதவிகளையும் விரும்பு கிறோம்" என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இந்திய 'பாரத் சக்தி ' என்ற இணையத்தளத்தின் பிரதான ஆசிரியர் நிதின் ஏ. கோகலே மற்றும் இந்தியாவின் Strategie News international க்கு கொழும்பில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பேட்டியொன்றை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி என்ற ரீதியில் அவர் வழங்கியிருக்கும் முதலாவது பேட்டி இதுவாகும்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகையில் கடந்த அரசாங்கம் சீனாவுக்கு கொடுத்தமை தவறான செயலென்றும், குறிப்பிட்ட அந்த பேரம் தொடர்பில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ வின் முதலாவது வெளிநாட்டு விஜயம் எதிர்வரும் 29ஆம் திகதி இந்தியாவுக்கு மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் இந்தப் பேட்டி இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்கிய பேட்டியின் சில பகுதிகள் இவ்வாறு அமைந்திருந்தன.

கேள்வி: தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய முன்னுரிமை ஆகியவற்றுக்கு நீங்கள் முக்கியத்துவம் வழங்கியிருக்கிறீர்கள். எந்தப் பக்கம் சார்ந்திருக்கிறீர்கள் என்று கேட்பதை விட, சீனா, இந்தியா தொடர்பில் இலங்கையின் நிலைப்பாடு என்ன?

பதில்: நடுநிலை என்று நான் கூறும்போது இரண்டு நாடுகளும் ஒன்று என்றோ சமநிலை என்றோ கூறுவதற்கில்லை. நாங்கள் அவ்வாறு சிந்திக்கவில்லை. அதனால்தான் நான் நடுநிலை என்று கூறுகின்றேன்.

நாங்கள் மிகவும் சிறியவர்கள். சமநிலையில் இருக்க முயன்றால் அதனைத் தாங்க முடியாது. நாங்கள் இல்லாமற் போய்விடலாம். வல்லரசுகளின் அதிகார போராட்டங்களில் நுழைய எங்களால் முடியாது. எனவே அனைத்து நாடுகளுடனும் சேர்ந்து செயற்படவே நாம் விரும்புகின்றோம். அத்துடன் எந்தவொரு நாட்டையும் பாதிக்கும் வகையில் செயற்பட நாம் விரும்பவில்லை.

இந்தியாவின் அக்கறை பற்றிய முக்கியத்தை நாம் புரிந்து கொண்டிருக்கிறோம். இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள எந்தவொரு செயற்பாட்டிலும் நாம் ஈடுபட முடியாது. அது எமக்குத் தெரியும். இந்தியா ஒரு பெரிய நாடு. அது ஒரு பெரிய சக்தி. அந்த பிராந்தியத்தில்தான் நாங்களும் இருக்கிறோம்.

நாம் சுதந்திரமான, இறைமையுள்ள நாடாக இருந்த போதிலும் நாம் எதிலும் சம்பந்தப்படவிரும்பவில்லை. மற்றைய நாடுகளின் நோக்கத்தின் தாற்பரியத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதன்படியே நடக்கவும் வேண்டும்.

ஆனால் அனைவருக்கும் இப்போது பொருளாதார அபிவிருத்தி முக்கியமாகும். நாட்டையும் கைத்தொழில்களையும் வர்த்தகத்தையும் பாதுகாத்துக்கொண்டே அதனை செய்ய வேண்டும். உலக பொருளாதாரத்துடன் சம்பந்தப்படுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். அதற்காக நாம் இந்தியாவின் உதவியைப் பெற வேண்டும். அது மட்டுமன்றி சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளின் உதவியும் எமக்குத் தேவை.

இது மிக முக்கியமானது. எனினும் நாம் யதார்த்தத்துக்கு முகம்கொடுக்க வேண்டும். சீனாவுடனான எமது தொடர்பு கடந்த சில வருடங்களில் குறிப்பாக, மஹிந்த ராஜபக் ஷ ஆட்சிக்காலத்தில் முற்றிலும் வர்த்தக மயமாகவே இருந்தது. ஆனால் ஆரம்பம் முதலே உலக பகுப்பாய்வாளர்கள் மற்றும் பூகோள அரசியல் பகுப்பாய்வாளர்கள் அந்த வழியிலேயே எம்மை இட்டுச் சென்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post