கடத்தப்பட்ட தூதரக பணியாளர் வாக்குமூலம் அளிக்கும் நிலையில் இல்லை – சுவிஸ்!!


கொழும்பில் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்ட தமது தூதரகத்தின் பெண் பணியாளர், உடல் நிலை மோசமாக இருப்பதால், தற்போது வாக்குமூலம் அளிக்கும் நிலையில் இல்லை என்று கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் பணியாளர் ஒருவர் வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்டு அச்சுறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

“2019 நவம்பர் 25 ம் திகதி சுவிஸ் தூதரகத்தின் இலங்கைப் பெண் பணியாளர் தொடர்பில் பாரதூரமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தூதரக பணியாளர் பலவந்தமாக கொழும்பு வீதியில் தடுத்து நிறுத்தப்பட்டார், காரில் ஏறுமாறு மிரட்டப்பட்டார்.

அதன் பின்னர் இனந்தெரியாத நபர்களால் கடுமையான அச்சுறுத்தப்பட்டதுடன் தூதரகம் தொடர்பான தகவல்களை வெளியிடுமாறு மிரட்டப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் பல பிழையான தகவல்கள் பரவுகின்றன. இதனால், சுவிஸ் தூதரகம் பின்வரும் தெளிவுபடுத்தல்களை வெளியிட விரும்புகிறது.

சுவிஸ் தூதரகம் உடனடியாக அதிகாரபூர்வமான முறைப்பாட்டை தாக்கல் செய்ததுடன் பொலிஸ் விசாரணைக்கு ஆதரவாகவும், விசாரணையை ஆரம்பிப்பதற்காகவும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குகின்றது.

மோசமடைந்து வரும் உடல்நிலை காரணமாக பாதிக்கப்பட்டவர் தற்போது வாக்குமூலம் அளிக்கும் நிலையில் இல்லை” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இதேவேளை, சுவிஸ் தூதரகப் பெண் பணியாளர் வாக்குமூலம் வழங்காததால் விசாரணைகளை முன்னெடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச நேற்று ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post