பயங்கரவாத ஒழிப்புக்கு இந்தியா இலங்கைக்கு உதவி!!

புதிய ஜனாதிபதியின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ வேலைத்திட்டத்துக்கு இந்தியா பூரண ஒத்துழைப்பு வழங்குமென இந்திய பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளதுடன் இலங்கையின் புதிய ஜனாதிபதி தமது வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு தமது அரசாங்கம் பூரண ஒத்துழைப்பை வழங்குமென்றும் கூறியுள்ளார்

இதற்கமைய 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலகுக் கடன் உதவியாக விரைவில் இலங்கைக்கு பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் .
அத்துடன், பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக மேலும் 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலகு கடனுதவியாக வழங்கப்படுமெனவும் இந்தியப் பிரதமர் தெரிவித்தார்.

ஹைதராபாத் மாளிகையில் நேற்று (29) இடம்பெற்ற இருநாட்டு அரச தலைவர்களுக்குமிடையிலான சந்திப்பின்போதே இந்திய பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

தமது அழைப்பினை ஏற்று இலங்கையின் புதிய ஜனாதிபதி தனது முதலாவது வெளிநாட்டு அரச முறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்தமையை அண்டைய நாடு என்ற வகையில் தமது நாட்டிற்கு கிடைக்கப்பெற்ற கௌரவமாக கருதுவதாக தெரிவித்த மோடி , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ பெற்றுக்கொண்ட வெற்றி தொடர்பில் மகிழ்ச்சி தெரிவித்ததோடு, ஒட்டுமொத்த இந்திய மக்களின் சார்பாகவும் ஜனாதிபதி அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்குமிடையே காணப்படும் நீண்டகால நட்புறவு, பொருளாதார, அரசியல் மற்றும் சமூக தொடர்புகளை முன்னோக்கி கொண்டு செல்வது தொடர்பில் அரச தலைவர்கள் இதன்போது கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

மேலும் இருநாடுகளினதும் பாதுகாப்பிற்கு முன்னுரிமையளித்து செயற்படுதல் தொடர்பிலும் அரச தலைவர்கள் நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டதோடு, இரு நாடுகளும் பொருளாதார ரீதியில் நெருங்கிய ஒத்துழைப்புடன் செயற்படுவது தொடர்பாகவும் இருதரப்பு வர்த்தக அபிவிருத்தியின் தேவை குறித்தும் விசேட கவனம் செலுத்தினர்.

நீண்டகால பிரச்சினையாக காணப்படும் இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுமென நம்புவதாக தெரிவித்த பிரதமர் மோடி, வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்து மாகாணங்களின் அபிவிருத்தி குறித்தும் கவனம் செலுத்தினார்.

இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ, இந்தியாவுக்கான அரச முறை விஜயத்தை மேற்கொள்ளுமாறு தனக்கு விடுக்கப்பட்ட அழைப்புக்கு நன்றி தெரிவித்ததோடு, இந்திய பிரதமரையும் இலங்கைக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தார்.

மேலும் இந்தியாவுடன் நெருங்கிய பொருளாதார ஒத்துழைப்புடன் செயற்பட விரும்புவதாகவும் இந்திய பிரதமரிடம் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.