தோட்டத்தொழிலாளர் தொடர்பில் பொதுவெளியில் அதாவுல்லாவின் கருத்துத்தொடர்பில் சபா.குகதாஸ் கண்டனம்!!!

நேற்றையதினம் தனியார் தொலைக்காட்சி சேவையில் ஒளிபரப்பாகிய அரசியல் விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் அதாவுல்லா மற்றும் முன்னாள் அமைச்சர் மனோகணேசன் இடையே மலையக சமூகம் தொடர்பில் கடும் வாக்குவாதங்களும் இடம்பெற்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் பல்வேறு அரசியற் தரப்பினரும் தமது கண்டனங்களை தெரிவித்துவரும் நிலையில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சபா குகதாஸ் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது

தமிழர் உரிமைப்போராட்டத்தை பயங்கரவாதம் என அதாவுல்லா கூறியதுடன் கிழக்கு மாகாணத்தில் பயங்கரவாதத்தை தாங்கள் தான் அழித்து மக்களை வாழ வைத்ததாக கூறினார். 

தமிழர்களின் உரிமைப்போராட்டத்தை பயங்கரவாதம் என அதாவுல்லா கூறியது வன்மையாக கண்டிக்கப்படவேண்டும். ஆரம்ப காலத்தில் தமிழர்களின் உரிமைப்போராட்டத்தில் பங்குபற்றி சில முஸ்லிம் சகோதரர்கள் வீரமரணம் அடைந்திருக்கின்றார்கள் பலர் போராட்டத்திற்கு பக்கபலமாக இருந்திருக்கின்றார்கள்.

 இன்று சில முஸ்லிம் அரசியல் கட்சிகளில் இருக்கும் தலைவர்கள் தமிழர் போராட்ட இயக்கங்களில் பிரதான பதவிகளில் அங்கம் வகித்துள்ளார்கள். இவ்வாறு வரலாறு இருக்க ஏப்ரல் 21 நடந்த குண்டுத்தாக்குதலை மறந்து தமிழர்களின் உரிமைப்போராட்டத்தை தமிழ் பேசும் சகோதர இனத்தவனாக இருந்து கூறியுள்ளார் என்பது மிக வேதனையானது.

அத்துடன் அடுத்த ஒரே மொழி பேசும் சகோதர மலையக தமிழ் மக்களை தோட்டக் காட்டான் என கொச்சையாக பேசியமை மிகவும் அரசியல் நாகரிகம் இல்லாத செயல். தனிநபர் அரசியல் வாக்குவாதத்தில் ஒட்டு மொத்த மக்களின் மனங்களை புண்படுத்தும் வார்த்தைகளை பிரயோகித்தமை வன்மையாக கண்டிக்கப்படவேண்டியது. இவ்வாறான நடவடிக்கைகள் தமிழ் பேசும் தமிழர், முஸ்லிம், மலையக தமிழ்மக்கள், மற்றும் சிங்கள மக்களிடையே குரோதங்களை ஏற்படுத்தாது இருக்க எதிர்காலத்தில் அதாவுல்லா மட்டுமல்ல எந்த அரசியல்வாதிகளும் இவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது. இதுவே இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப உறுதுணையாக இருக்கும்

அந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் மனோகணேசன் தண்ணீரை அதாவுல்லா மீது வீசியமையும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் காரணம் கருத்துக்களை கருத்துக்களினால் பேசுவதே ஐனநாயகம் வன்முறைகளை தூண்டும் வழிகளை தவிர்த்துக் கொள்வதே நாகரிகம் எனவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.