கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட மூவர் கைது!!

திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆத்திமேடு பிரதேசத்தில் 6ம் கட்டை பகுதியில் இன்று 18000 மில்லி கிராம் கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர் உட்பட மூவரைக் கைது செய்ததாகத் திருகோணமலை மாவட்ட பிராந்திய விஷத்தன்மையுடைய போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீண்டகாலமாகக் கஞ்சா விற்பனை செய்து வருகின்றனர் என்றும் குறித்த பெண்ணும் ஓர் ஆணும் இரண்டாவது முறையாகக் கஞ்சா விற்பனை செய்யும் போது பிடிபட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

திருகோணமலை லவ்லேன், தக்வா நகரைச் சேர்ந்த 20 வயதுடைய ஒருவரிடமிருந்து 6000 மில்லிகிராம் கேரளா கஞ்சாவும், ஜாமாலியா பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய நபரிடமிருந்து 5000 மில்லி கிராம் கேரளா கஞ்சாவும், ஆத்திமேடு பிரதேசம் 6ம் கட்டை பகுதியைச்சேர்ந்த 32 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயிடமிருந்து 7000 மில்லிகிராம் கேரளா கஞ்சாவும் கைப்பற்றப்பட்டதாகப் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சாவையும் நிலாவெளி பொலிஸார் வசம் ஒப்படைத்தாக அவர்கள் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களைக் கேரளா கஞ்சாவுடன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாக நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.