தொழில் முனைவோர் விவசாய மற்றும் நுண்கடன்களை ரத்து செய்ய நடவடிக்கை!!பாதிக்கப்பட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முனைவோரின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணவுள்ளதாகவும் இதற்கென இவர்கள் பெற்றுக் கொண்ட நுண்நிதி,விவசாயக் கடன் உள்ளிட்ட பல கடன்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.அமைச்சுப் பொறுப்புக்களை கடமையேற்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் தெரிவித்ததாவது:

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முனைவோர் தற்போது பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இதனால் இவர்கள் தமது சொத்துக்களை இழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்படவுள்ளது. இதற்கென அவர்களுக்கு விஷேட சலுகைகளும் வழங்கப்படும். இப்பிரச்சினையைத் தீர்க்கத் தேவையான ஆரம்ப கலந்துரையாடல்களை அரச மற்றும் தனியார் வங்கிகளுடன் நடத்தியுள்ளோம். வங்கிகளிடமிருந்து இது தொடர்பான அறிக்கைகள் கிடைத்தவுடன் ஒரு வாரகாலத்தில் இந்த சலுகை பெற்றுக் கொடுக்கப்படும்.

முன்னைய அரசாங்கம் தோல்வியடைந்தமைக்கு முக்கிய காரணம் சரியான திட்டமிடலின்மையாகும். நாம் அதிகாரத்துக்கு வந்ததும் மிகத் தெளிவாக எமது கொள்கைகளைத் தெரிவித்துவிட்டோம்.

இதன்படியே நாம் செயலாற்றுவோம்.எமது கொள்கைப் பிரகடனத்திலுள்ள அனைத்து வாக்குறுதிகளும் ஐந்து வருட காலத்தில் நிறைவேற்றப்படும். எமக்கு சரித்திரத்திலேயே மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது. அத்துடன் சிறப்பான தலைமையும் கிடைத்துள்ளது. 

நாம் பிரதமரின் தலைமையில் மத்திய வங்கி, அரச மற்றும் தனியார் வங்கிகளின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளோம். இதன் நோக்கம் எதிர்கால முதலீடுகளுக்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்துவதே. விசேடமாக இன்று சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வியாபாரிகள் பாரிய அளவில் பாதிப்படைந்துள்ளனர்.

அவர்களின் அழுத்தத்தை குறைக்கத் தேவையான நடவடிக்கைகள் என்ன வென்ற அறிக்கைகளை வங்கிகளிடம் கோரியுள்ளோம். இந்த அறிக்கைகள் கிடைத்தவுடன் தேவையான சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுப்போம் என்றார். நிதியமைச்சில் நேற்று (02) காலை தனது பதவியை பொறுப்பேற்ற பின்னரே அமைச்சர் செஹான் சேமசிங்க இதனை தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post