நாங்கள் ஏனைய சமூகத்தை விட மிகவும் சுயநலவாதிகள்; முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா!!

‘இஸ்லாத்தை மற்ற சமூகத்துக்கு எத்திவைக்கும் பொறுப்பில் நமது சமூகம் இருக்கிறது. அவர்கள் எம்மை ஒதுக்கினாலும் நாம் அவர்களை ஒதுக்கியோ அல்லது ஒதுங்கியோ வாழ முடியாது. பல்லின சமூகத்துடன் அறுந்து போயுள்ள எமது இன நல்லுறவு கட்டியெழுப்பபட வேண்டும்’ என்று முன்னாள் உயர் கல்வி பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா தெரிவித்தார்.
 
சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்; நமது முஸ்லிம் சமூகம் இன்று சிங்கள சமூகத்தின் ஒட்டுமொத்த வெறுப்பையும் சம்பாதித்துள்ளது. அதேபோன்று தமிழ் சமூகத்துடனும் எமது உறவு சீராக இல்லை. இவ்வாறு தொடர்ந்தும் அவர்களோடு எந்த தொடர்பும் இல்லாமல் வெறுப்புணர்வோடு வாழலாம் என்று முஸ்லிம் ஒருவர் கருதினால் அவர் இஸ்லாத்தில் இல்லை என்றே கருத வேண்டும். மாற்று சமூகத்தினர் எம்மிலிருந்து பிரிந்து இருக்க விரும்பினாலும் நாம் பிரிந்து வாழ முடியாது. நாம் அந்த பிரிவினையை உடைத்தெறிதல் வேண்டும்.

இன்று பெரும்பான்மை சமூகம் ஏன் எம்மீது வெறுப்பு கொண்டுள்ளது என்பதைமுதலில் ஆராய வேண்டும், அவர்கள் எம்மோடு நல்லுறவு பேண ஏன் விருப்பமில்லாதவர்களாக இருக்கிறார்கள் என்று நாம் மீட்டிப்பார்க்க வேண்டும். இது இங்கு இருக்கின்ற இளம் சமூகத்தினரின் கடமையாக இருக்கிறது. சிங்கள சமூகம் எம்மை நசுக்குவதற்கு, பொருளாதாரத்தை சூறையாடுவதற்கு, இஸ்லாமிய கடமைகளை செய்வதற்கு குறுக்கே நிற்கிறார்கள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நாம் செய்கிற தவறை ஏற்றுக்கொள்ள ஒருபோதும் நாம் தயாரில்லை என்ற நிலைப்பாட்டில் இருக்கிறோம்.

நாங்கள் ஏனைய சமூகத்தை விட மிகவும் சுயநலவாதிகளாக இருக்கிறோம். அவர்களை விடவும் பயங்கரமான இனவாதிகளாக நாம் இருப்பதை ஏற்றுக்கொள்ள நாம் தாயாரில்லை. நாம் வியாபாரத்தில தவறு செய்கிறோம். அதில் நேர்மை இல்லை. இவற்றையெல்லாம் விட நமது அரசிய தலைவர்கள் செய்யும் தவறுகள் ஏராளம், அவர்கள் செய்துள்ள தவறுகளால்தான் இன்று ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் மீதும் குற்றம் சுமத்தப்படுகிறது. மற்றைய சமூகத்தினரின் நன்மதிப்பை முஸ்லிம் சமூகம் இழந்து நிற்கிறது.

இந்த சந்தர்ப்பத்தில்தான் புதியதொரு எதிர்காலத்தையும் இன நல்லுறவையும் கட்டியெழுப்புகின்ற சந்ததிகளாக மாணவர்கள் உருவெடுக்க வேண்டும். நீங்கள் தைரியப்பட வேண்டும், நீங்கள் வலிமையிழந்தால் உங்களை இலகுவில் ஏமாற்றி விடுவார்கள். உங்களை ஏமாற்ற முஸ்லிம் தலைவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எம்மை தொடர்ந்தும் ஏமாற்றிக் கொண்டே இருப்பார்கள் என்றார்.

No comments

Powered by Blogger.