தேர்தலில் போட்டியிடுவதற்கு பிக்குகளை அனுமதிக்க வேண்டாம்; சிரேஸ்ட்ட பிக்குமார் கோரிக்கை!!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பௌத்த பிக்குமார் எவருக்கும் போட்டியிடும் வாய்ப்பை வழங்க வேண்டாம் என பௌத்த பீடங்களை சேர்ந்த சிரேஷ்ட பிக்குமார், அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் கோரிக்கை விடுக்க தீர்மானித்துள்ளனர்.

இதன் முதல் கட்டமாக சிரேஷ்ட பிக்குகள் சிலர் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு இது குறித்து அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.

பௌத்த பிக்குமார் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் மாகாண சபை உறுப்பினர்களாகவும் பிரதேச சபை உறுப்பினர்களாகவும் பதவி வகிப்பது பௌத்த சாசனத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். பிக்குமார் ஆலோசகர்களாக இருக்க வேண்டும் என்பதால், அரசியல் பதவிகளை வகிப்பது அதற்கு தடையாக உள்ளது எனவும் சிரேஷ்ட பிக்குமார், பிரதமரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் கடந்த காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகித்த போது கிடைத்த அனுபவங்கள் மற்றும் நடந்த சம்பவங்கள் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு எதிர்காலத்தில் பிக்குகள் எவருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை வழங்க வேண்டாம் என சிரேஷ்ட பிக்குமார் கோரியுள்ளனர்.

சிரேஷ்ட பிக்குமாரின் இந்த கோரிக்கை தொடர்பாக கவனம் செலுத்துவதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச, பிக்குமாரிடம் கூறியுள்ளார்.

இந்த கோரிக்கைகயை ஜனாதிபதிக்கு தெரியப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் சிரேஷ்ட பிக்குமார், பிரதமரிடம் தெரிவித்துள்ளனர்.

பொதுத் தேர்தலுக்கு முன்னதாக இந்த கோரிக்கை சம்பந்தமாக அனைத்து கட்சிகளின் தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கவும் சிரேஷ்ட பிக்குமார் தீர்மானித்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post