ரி-20 சம்பியனுக்கு அதன் சொந்த மண்ணிலேயே வைத்து அதிர்ச்சி கொடுத்த அயர்லாந்து!!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், அயர்லாந்து அணி 4 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், 1-0 என்ற கணக்கில் அயர்லாந்து அணி முன்னிலைப் பெற்றுள்ளது.

கிரெனடா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, போல் ஸ்டயர்லிங் 95 ஓட்டங்களையும், கெவீன ஒ பிரையன் 48 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், செல்டோன் கொட்ரெல், கெர்ரி பியர் மற்றும் டுவைன் பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஹெய்டன் வோல்ஷ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 209 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்பு 204 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் அயர்லாந்து அணி 4 ஓட்டங்களால் வெற்றியை பதிவு செய்தது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, எவீன் லீவிஸ் 53 ஓட்டங்களையும், சிம்ரொன் ஹெட்மியர் 28 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

அயர்லாந்து அணியின் பந்துவீச்சில், ஜோசுவா லிட்டில் 3 விக்கெட்டுகளையும், கிரைஜ் யங் 2 விக்கெட்டுகளையும், சிமி சிங் மற்றும் ஜோர்ஜ் டொக்ரெல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 47 பந்துகளில் 8 சிக்ஸர்கள் 6 பவுண்ரிகள் அடங்களாக 95 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட போல் ஸ்டயர்லிங் தெரிவு செய்யப்பட்டார்.

மூன்று போட்டிகள் ரி-20 தொடரின் இரண்டாவது போட்டி, நாளை மறு தினம் சென் கிட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

No comments

Powered by Blogger.