பங்களாதேஷ் பிரீமியர் லீக்: இறுதிப் போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது ராஜ்ஷாஹி ரோயல்ஸ் அணி!!

பங்களாதேஷ் பிரீமியர் லீக் ரி-20 தொடரின் இறுதிப் போட்டிக்கான இரண்டாவது தகுதி போட்டியொன்றில், ராஜ்ஷாஹி ரோயல்ஸ் அணி 2 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

டாக்கா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், ராஜ்ஷாஹி ரோயல்ஸ் அணியும், சாட்டோகிராம் சேலஞ்சர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜ்ஷாஹி ரோயல்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிங்கிய சாட்டோகிராம் சேலஞ்சர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, கிறிஸ் கெய்ல் 60 ஓட்டங்களையும், மொஹமதுல்லா 33 ஓட்டங்களையும், அசேல குணரத்ன 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ராஜ்ஷாஹி ரோயல்ஸ் அணியின் பந்துவீச்சில், மொஹமட் இர்பான் மற்றும் மொஹமட் நவாஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஆந்ரே ரஸ்ஸல், அபீப் ஹொசைன் மற்றும் அலோக் கபாலி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 165 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ராஜ்ஷாஹி ரோயல்ஸ் அணி, 19.2 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது.

இதனால் ராஜ்ஷாஹி ரோயல்ஸ் அணி 2 விக்கெட்டுகளால் வெற்றியை பதிவு செய்ததோடு, இறுதிப் போட்டிக்கும் முன்னேறியது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, ஆந்ரே ரஸ்ஸல் ஆட்டமிழக்காது 54 ஓட்டங்களையும், இர்பான் சுகூர் 45 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

சாட்டோகிராம் சேலஞ்சர்ஸ் அணியின் பந்துவீச்சில், ருபெல் ஹொசைன் மற்றும் ரயாட் எம்ரிட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், மெயிடி ஹசன், மொஹமதுல்லா மற்றும் ஸியாவுர் ரஹ்மான் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 22 பந்துகளில் 7 சிக்ஸர்கள் 2 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 54 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட ஆந்ரே ரஸ்ஸல் தெரிவு செய்யப்பட்டார்.

மகுடத்திற்கான இறுதிப் போட்டியில், குல்னா டைகர்ஸ் அணியும், ராஜ்ஷாஹி ரோயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டி, நாளை (வெள்ளிக்கிழமை) டாக்கா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

No comments

Powered by Blogger.