நூறாவது வயதில் 25-வது பர்த்டே! -இங்கிலாந்து பாட்டியின் லீப் இயர் ஸ்பெஷல்!!

`எனக்குலாம் ரெண்டு பர்த்டே தெரியுமா?' என பள்ளிக்காலத்தில் கெத்து காட்டிய மாணவர்களைப் பார்த்திருப்போம். பிப்ரவரி 29-ம் தேதி பிறப்பவர்கள் பிப்ரவரி 28-ம் தேதியும் மார்ச் 1-ம் தேதியும் தங்கள் பிறந்தநாளைக் கொண்டாடித் தீர்ப்பார்கள். அவர்களின் ஒரிஜினல் பர்த்டே, லீப் ஆண்டில்தான் வரும். அன்றைய தினத்தை அதகளம் செய்துவிடுவார்கள். அப்படியொருவர்தான் தனது 25-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். ஆனால், அவருக்கு வயதோ 100!


இளம் வயதில்

லீப் வருடமான 1920-ம் ஆண்டு சரியாக பிப்ரவரி 29-ம் தேதி பிறந்தவர் இங்கிலாந்து போர்ட்ஸ்மவுத் நகரத்தைச் சேர்ந்த மூத்த பெண்மணி க்ளிஃபே. குடும்பத்தினர், நண்பர்கள், பணியாளர்கள் எல்லோரும் சேர்ந்து அவருக்காக சர்ப்ரைஸ் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்து அவரைத் திக்குமுக்காட வைத்துவிட்டனர்.

க்ளிஃபே, தன் கடந்த காலங்களில் சிகையலங்கார நிபுணராகப் பணியாற்றியவர். ஆரோக்கியத்திலும் அழகிலும் மிகுந்த அக்கறை கொண்டிருந்ததால் இவ்வளவு வயது வரையிலும் கம்பீர ஆற்றலோடும் குழந்தைச் சிரிப்போடும் க்ளிஃபேயால் திகழ முடிகிறது. தனக்கு நடைப்பயிற்சி மேற்கொள்ளப் பிடிக்கும் என்பவர், ``விருப்பமானவற்றைச் சாப்பிடுவேன்!" என, தனது நீண்டகால ஆயுளின் ரகசியத்தைப் போட்டுடைத்திருக்கிறார்.
கொண்டாட்டம்

லீப் வருடத்தில் பிறந்திருப்பது குறித்து அவரிடம் கேட்டதற்கு, ``இதை நான் பெரிதாகவெல்லாம் எடுத்துக்கொள்ளவே இல்லை" என்கிறார், க்ளிஃபே. மேலும் அவர் கூறும்போது, தன் பாட்டி 47 வயதில் இறந்ததாகவும், தன் தாய் இளம்வயதிலேயே இறந்துவிட்டதாகவும் சொல்கிறார். ஆனால், தன் தங்கை 97 வயதையும், தான் 100 வயதையும் தொட்டிருப்பதொன்றும் புதியதாகத் தெரியவில்லை எனச் சொல்லும் க்ளிஃபே, தனது வாழ்க்கையை ஒரு தத்துவமாக உணர்வதாகவும் கூறுகிறார்.

ஹேப்பி லீப் இயர் பர்த்டே, பாட்டி!
Previous Post Next Post