மட்டக்களப்பில் பிரதேச சுற்றுலா வழிகாட்டிக்கென இலவச பயிற்சி நெறி!!

கல்லடி நிருபர்
இன்றைய (29/02/2020) தினம் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறையினை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதற்காகவும் அதன் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பினை பெற்றுத்தரும் நோக்குடனும் செயல்திறன் மிக்க பிரதேச சுற்றுலா வழிகாட்டிகளுக்கான இலவச பயிற்சி நெறி மட்டு- கல்லடியில் Director விவேகானந்தன் தலைமையில் இடம்பெற்றது. 

இணைப்பாளரானரான திருமதி. ராஜகுமாரி கனகசிங்கம் மற்றும் பிரதேச சுற்றுலா வழிகாட்டி பயிற்சி நெறிக்கென தோற்றியிருந்த கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களை சேர்ந்த இளைஞர் யுவதிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தார்கள். 

இப் பயிற்சி நெறி நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுற்றுலாத் துறை தவிசாளர் ஹரிப் பிரதாப் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

அங்கு மேலும் உரையாற்றிய அவர்..... 

நான் சாக்கடை அரசியல் செய்யும் நோக்கத்தில் அரசியலுக்குள் நுழையவில்லை என்னால் முடிந்த ஏதாவது ஒன்றையாவது எனது மக்களுக்காக நான் செய்தேயாக வேண்டுமென்று திடசங்கற்பம் பூண்டுள்ளேன் மற்றவர்கள் போல் அது செய்வேன் இது செய்வேன் என பாசாங்கு செய்யப் போவதுமில்லை எது முடியுமோ அதனை பொறுப்பெடுத்து செய்து முடிப்பதுதான் எனது பாணி. 

அதனை தொடர்ந்தும் கடைப்பிடித்து வருகிறேன்; நான் இன்று தொழில் துறையில் முன்னேற்றம் கண்டவனாக இருக்கிறேன் ஆனால் எனது கடந்த காலங்கள் மிகவும் துன்பம் நிறைந்தது; காலில் போடும் சப்பாத்து தேய்ந்து பிய்ந்து மூன்று விரல்கள் வெளியில் தெரியும் அதனை புதிதாக கொள்வனவு செய்திட கூட முடியாத நிலையிலும் எனது கடின உழைப்பினையும் முயற்சியினையும் ஒரு போதும் கைவிடவேயில்லை முடிவு கிடைக்கும் வரையில் எதிர்நீச்சல் போட்டேன் அதன் பலாபலன்தான் இன்று உங்கள் முன்னிலையில் மதிப்பிற்குரியவனாக சமூகமளித்துள்ளேன். 

எதிர்வரும் காலங்களில் நமது வளத்தினை நாம் இனங்கண்டு அதனை சுற்றுலா பயணிகளுக்கு இனங்காண்பித்து உள்ளூர் மற்றும் சர்வதேச சுற்றுலாத்துறையின் வருமானத்தினை கிழக்கு நோக்கி நகர்த்திட நாம் அனைவரும் கை கோர்க்க வேண்டும் அதுவும் அரசுடன் இணைந்த நிறுவனங்களினூடாக அரச அனுமதி பெற்ற சிறந்த சுற்றுலா வழிகாட்டிகளாக திகழ்வதற்கான அனைத்து விதமான முன்னெடுப்புகளையும் கிழக்குமாகாண சுற்றுலாத்துறை தவிசாளர் என்ற வகையில் நான் ஒத்துழைப்பும் ஆதரவும் நல்குவேன் என உறுதி கூறிக் கொள்கிறேன்; என்று தனது உரையில் மேற் கண்டவாறு கூறினார். 

இத் திட்டம் பற்றி INTERNATIONAL KNOWLEDGE POOL இயக்குனர் விவேகானந்தன் குறிப்பிடுகையில்..... 

உள்வாங்கப்பட்ட வளர்ச்சிக்கான திறன்கள் அபிவிருத்தி திட்டமானது (Skills for Inclusive Growth) அம்பாறை,மட்டக்களப்பு,திருகோணலை ஒன்றிணைந்த கிழக்கு மாகாணத்திற்கான மாவட்ட சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் கைத்தொழில் துறையில் உள்ள பெண்கள்/ஆண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான திறன்களை மேம்படுத்தும் திட்டமாகும். 

இது தொழில் முயற்சியாளர்களின் செயல் திறனைப் பலப்படுத்தி தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதுடன் வருமானத்தை அதிகரிக்கவும் செய்யும்.

உள்வாங்கப்பட்ட வளர்ச்சிக்கான திறன்கள் அபிவிருத்தி திட்டமானது இலங்கையின் தொழில் அபிவிருத்தி மற்றும் தொழிற் பயிற்சி அமைச்சின் ஒத்துழைப்புடனான அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் ஒரு புத்தாக்க முயற்சியாகும் இத்திட்டத்தின் பிரதான அனுசரணையாளர்களாக அவுஸ்ரேலியன் எய்ட் (Australian Aid) நிறுவனத்தினர் இயங்குவதாகவும் தெரிவித்தார்.Previous Post Next Post