வடக்கை அச்சுறுத்திய முகமூடி கொள்ளை கும்பல் கைது! – ஆயுதங்களும் சிக்கியது!

வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் முகமூடி அணிந்து கொண்டு கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பலை சேர்ந்த ஐந்து சந்தேக நபர்கள் இன்று (29) அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் சேனாதிரா தலைமையிலான குழுவினரின் விசாரணைகளில் அடிப்படையிலேயே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம், சுன்னாகம், சாவகச்சேரி, கொடிகாமம் மற்றும் மன்னர் உள்ளிட்ட பகுதிகளில் முகமூடிகளை அணிந்தவாறு வாள்கள் மற்றும் கைக் குண்டுகளை காண்பித்து அச்சுறுத்தி கொள்ளையிட்டு வந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்படும் போது அவர்களிடம் இருந்து 2 பழைய கைக்குண்டுகள், 3 வாள்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு போன், ஒருதொகை நகைகள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டியை சேர்ந்த இருவரும், ஏழாலை மற்றும் நெல்லியடியை சேர்ந்த இருவருமாக ஐவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் தொடர்புடைய மேலும் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் ஐவரையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவர்கள் அனைவரையும் 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதேவேளை சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இதுவரை 40 இலட்சம் ரூபா பெறுமதியாக நகைகள் கொள்ளையிடப்பட்டமை தெரியவந்துள்ளது.


Previous Post Next Post