கிளிநொச்சி பசுமைப் பூங்காவில் நிர்மாணிக்கப்பட்ட தொங்கு பாலம்!!

நிர்வாக நடைமுறைகளுக்கு மாறாக அமைக்கப்பட்டதாக RTI தகவல் மூலம் அம்பலம்

கிளிநொச்சி நகரிலுள்ள பசுமைப் பூங்காவில் கரைச்சி பிரதேச சபையினால் அமைக்கப்பட்டுள்ள தொங்கு பாலம் எந்தவிதமான நிர்வாக நடைமுறைகளுக்கும் சட்டத்திட்டங்களுக்கும் உட்படாது அமைக்கப்பட்டிருக்கிறது எனத் தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தத் தகவலை, தகவல் அறியும் (Right to Information Commission of Sri Lanka (RTI)) உரிமைச் சட்டத்தின் வழியாகப் பெற்று ஊடகங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார் ஊடகவியலாளர் மு. தமிழ்ச்செல்வன்.

தொங்கு பாலம் அமைக்கப்பட்ட முறைமை தொடர்பாகச் சமூக மட்டத்தில் எழுந்த கேள்விகள், விமர்சனங்களை அடுத்துத் தகவல் அறியும் சட்டத்தை (RTI) ப் பயன்படுத்தி உண்மை நிலையினை அறிந்திருக்கிறார் அவர். இதனை ஒரு ஊடகவியலாளர் மட்டுமல்ல, சமூகத்திலுள்ள எவரும் செய்யலாம். வேண்டிய போது எந்தத் திணைக்களத்திடமிருந்தும் எவரும் உரிய தகவலை RTIஐ மூலம் பெற்றுக் கொள்ள முடியும். அப்படிச் செய்வதன் மூலமே நாம் ஊழலைக் கட்டுப்படுத்த முடியும். இது பொதுமக்களுக்குக் கிடைத்துள்ள பெரிய நன்மை. இதை ஒவ்வொருவரும் கொஞ்சம் அக்கறையோடு செய்தால் எவ்வளவோ மாற்றங்களைக் கொண்டு வர முடியும். இதில் ஊடகவியலாளர்களுக்கான பொறுப்பு அதிகமுண்டு.

தமிழ்ச்செல்வன் இதுவரையில் கிளிநொச்சியில் 47 வரையான தகவல்களைப் பெற்றிருக்கிறார். 47 தகவல்களிலும் தெரியவந்திருப்பது ஊழல் மற்றும் நிர்வாக முறைகேடுகள் ஆகும். ஆனால், இதற்குப் பிறகு என்ன நடந்தது? இவை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து எதுவும் தெரியாது. அதை அறிய வேண்டுமானால், அதற்குப் புதிய படிவங்களை நிரப்பி விண்ணப்பிக்க வேண்டும். அதற்காக இன்னும் பத்தோ பதினைந்தோ நாட்கள் காத்திருக்க வேண்டும்.

இந்தத் தொங்கு பாலம் தொடர்பில் தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் விசாரணை அறிக்கையில் பின்வரும் விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

1. தொங்கு பாலத்தின் வேலைகள் நிறைவேற்றப்பட்டிருந்த போதும் 1989 ஆம் ஆண்டின் வர்த்தமானி அத்தியாயம் vii இன் 169-173 பிரிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைவாக செலவு மதிப்பீட்டுகள் எதுவும் மேற்கொள்ளப்படாது பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

2. வட மாகாண சபையின் 2017 பெப்ரவரி 15ஆம் திகதி NP/09/FRM/CIR2017 இலக்க மாகாண நிதி சுற்றுநிருபம் PF/06/2015(1) பிரதேச சபைகள் பிரிவு பெறுகைகள் குழுவின் கீழ் ஆகக் குறைந்தது மூன்று கூறுவிலை கோரல் பெறப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தொங்கு பாலம் விடயத்தில் அவை எதுவும் நடைபெறவில்லை.

3. தொங்குபாலத்தை நிர்மாணித்த இறைமகன் ஓட்டுத் தொழிற்சாலை, 2019.12.30 திகதி கடிதத்தின் 2019 நவம்பர் 16ஆம் திகதியிலிருந்து 2019 டிசம்பர் 30ஆம் திகதி வரை கரைச்சி பிரதேச சபையுடன் எந்தவிதமான வேலை உடன்படிக்கையும் இன்றி 18 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதிக்கு சபையின் வேண்டுகோளுக்கு அமைய தன்னால் வேலைகள் செய்யப்பட்டதாக எழுத்து மூலம் தெரிவித்துள்ளது.

4. 1985 ஏப்ரல் 15ஆம் திகதி வர்த்தமானி அறிவுறுத்தலுக்கு அமைய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

5. திணைக்கள நடவடிக்கை அமைவாக மூலதன வேலை ஒன்றை மேற்கொள்ள வேண்டுமாயின் வருட பாதீட்டில் அது உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும் என விதிமுறை கூறுகிறது. ஆனால் கரைச்சி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் தொங்கு பாலம் உள்ளடக்கப்படவில்லை.

எனவே தொங்கு பாலம் அமைத்து முடிக்கும் வரை கரைச்சி பிரதேச சபையினரால் எந்த வித சட்ட நடைமுறைகளுக்கும் உட்படாது பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இவ்வாறு நிர்வாக நடைமுறைகள் எதையும் கடைப்பிடிக்காமல் ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பது எவ்வளவு தவறானது? இது குறித்து சபையின் பதில் என்ன? ஏனெனில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளே சபையை வழிப்படுத்துகிறார்கள். இது தொடர்பாக உள்ளுராட்சித் திணைக்களத்தின் நடவடிக்கை எவ்வாறு அமைந்தது? அந்த நடவடிக்கையின் பயன் என்ன? இவையெல்லாம் தவிர்க்க முடியாத கேள்விகள்.

நாடு முழுவதிலும் முறைகேடுகளைக் கண்டறிவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் தகவல் அறியும் சட்டம் (RTI) கொண்டு வரப்பட்டது. அது நமக்கு தவறுகளைக் கண்டறிவதற்கு வழியைத் தந்துள்ளது. இதன் மூலம் மக்களின் கேள்வி கேட்கும் அதிகாரம் வலுப்பெற்றுள்ளது. அது மட்டுமல்ல, இதற்குப் பதிலளிக்க வேண்டிய பொறுப்பு சம்பந்தப்பட்ட நிர்வாகத்துக்கு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு கண்டறியப்படும் தவறுகள் பொதுமக்கள் பார்வைக்கு வரும்போது அது குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும். இதை எப்படிக் கட்டுப்படுத்துவது? இதற்கான நடவடிக்கைகளை எப்படி மேற்கொள்வது என்பது குறித்து அவர்கள் அறிய வேண்டும். இதற்கு இரண்டாவது கட்ட நடவடிக்கைகள் அவசியம். அதைச் செய்ய வேண்டியது சமூகச் செயற்பாட்டியக்கங்கள், புத்திஜீவிகள், கட்சிகள், அரசியல் தலைவர்கள், ஊடகங்கள் போன்ற தரப்புகளுக்குரியது.

இந்தத் தரப்புகள் அதைச் செய்தால்தான் இந்த RTI க்குப் பெறுமதியுண்டு.Previous Post Next Post