கனத்த மனதோடு பாடல் எழுதியிருக்கிறேன் – வைரமுத்து உருக்கம்!

விஜய் சேதுபதி – ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக நடிக்கும் 'க/பெ ரணசிங்கம் என்ற திரைப்படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல் எழுதியுள்ளார். இதில் அவர் எழுதிய பாடல் ஒன்று கிராம மக்களையும் அழவைத்துள்ளது.

இந்த பாடல் குறித்து கருத்து தெரிவித்துள்ள வைரமுத்து, பாடலின் சந்தர்ப்பத்தை இவ்வாறு விளக்கியுள்ளார்.

"செம்மண் காட்டு மக்களும், அந்த மண்ணை நனைக்கும் கண்ணீரும் கதையாக அமைந்திருப்பதால், தமிழ் சடுகுடு ஆடுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்து இருக்கிறது.

மழை இல்லாத ஊரில், பிழைக்க வழியில்லாமல் வெளிநாடு சென்ற கணவன் வீடு திரும்பவில்லை. அவன் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்ற செய்தி கேட்டு, ஊரே அவன் மனைவியோடு சேர்ந்து துக்கம் கொண்டாடுகிறது. இந்த சூழ்நிலைக்கு கனத்த மனதோடு பாட்டு எழுதியிருக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

அந்த பாடல்வரிகள் பின்வருமாறு அமையப்பெற்றுள்ளன.

பேரு ரணசிங்கம்
பெருங்கொண்ட குணசிங்கம்
ஊருக்கே தனித்தங்கம்
ஊரத்துப் போயிருச்சே
கண்ணு முழியழகு
கருப்பட்டி நெறத்தழகு
இளவட்ட கல்லழகு
இல்லேன்னு போயிருச்சே
சிலையாட்டம் பொண்டாட்டி
தெய்வம்போல் சிறுகுழந்த
மலையாட்டம் நம்பி நிக்க
மங்கு திரை ஆயிருச்சே
பொட்டவெளி பூமியில
பொட்டு மழை பெய்யலையே
பொட்டு மழை பெய்யாமப்
பொட்டழிஞ்சு போயிருச்சே
எட்டூரும் சொல்லிவிட்டு
இனம் வந்து சேந்திருச்சே
இனம் வந்து சேர்ந்தாலும்
ரணசிங்கம் காணலையே
கம்மாயத் தூர்வாரி
தந்தானே நல்ல தண்ணி-இப்ப
கண்ணெல்லாம் கிணறு வெட்டி
கண்டதெல்லாம் உப்புத்தண்ணி…

Previous Post Next Post