சாப்பிட்டதும் டீ குடிக்கக் கூடாது – ஏன் தெரியுமா?

ஒரு நாளை டீ அல்லது காபி குடித்து தான் பலரும் ஆரம்பிப்போம். அதில் பலரும் அதிகம் விரும்பி குடிப்பது டீயைத் தான். டீ சோம்பலைப் போக்கி, உடலுக்கு உடனடியாக புத்துணர்ச்சியை அளிக்கும். டீயில் பல வெரைட்டிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நன்மைகள் அடங்கியுள்ளன.

மேலும் டீ பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கக் கூடிய அற்புத பானமாகும். ஆனால் உணவு உண்ட பின் டீ குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று பலர் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள்.

இருப்பினும், இது ஒரு சர்ச்சைக்குரிய பொருள். ஏனெனில் ஆய்வுகளோ டீ குடிப்பது செரிமான மண்டலத்திற்கும், இரைப்பைக்கும் நல்லது என்று கூறுகின்றன. அதே சமயம் டீயில் உள்ள காப்ஃபைன் செரிமான மண்டலத்தால் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச முடியாமல் தடுக்கக்கூடிய பொருள்.

செரிமான மண்டலத்தில் டீயின் செயல்பாடு
ஆய்வுகளின் படி, உணவிற்கு பின் ஒருவர் டீ குடிப்பதால், வாய்வு தொல்லை மற்றும் வயிற்று உப்புசம் போன்றவற்றில் இருந்து விடுபடுவதாக தெரிய வந்துள்ளது. உணவுக்கு பின் டீ குடிப்பதால், உடலில் கேட்டசின்களின் அளவு குறையும். ஆனால் அனைத்து வகையான டீயும் ஒரே பலனைத் தருவதில்லை.

மூலிகை டீ மற்றும் க்ரீன் டீ
மூலிகை டீ மற்றும் க்ரீன் டீயில் செரிமானத்திற்கு உதவும் அதிகளவிலான பாலிஃபீனால்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இந்த வகை டீக்கள், பித்த நீர், எச்சில் மற்றும் செரிமான அமிலங்களின் உற்பத்தியைத் தூண்டி செரிமான மண்டலத்தின் செயல்பாட்டிற்கு சிறப்பாக உதவுகிறது. மேலும் இவற்றில் சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு பொருட்கள் உள்ளன. இவை செரிமான பிரச்சனைகளைக் குறைக்க உதவும். அதுமட்டுமின்றி, இந்த வகை டீக்களில் உள்ள சில பாலிஃபீனாலிக் பொருட்களான கேட்டசின்கள், செரிமான நொதிகளின் செயல்பாட்டை அதிகரிக்கும், அதே சமயம் பெப்சின் டயட்டரி புரோட்னை உடைத்தெறிய உதவும்.

உணவுக்கு பின் ஏன் டீ குடிக்கக்கூடாது என்பதற்கான காரணங்கள்:
டீயில் உள்ள பாலிஃபீனாக் உட்பொருட்கள் இரும்புச்சத்து உறிஞ்சுவதில் இடையூறை ஏற்படுத்தி, வயிற்றில் இரும்புச்சத்தை தேங்கி படியச் செய்துவிடும் என ஆய்வுகள் கூறுகின்றன. எனவே உணவிற்கு பின் டீ குடிக்க நினைத்தால், வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவை உண்ண பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் உணவு உண்ட பின் டீ குடிப்பதால், உடலில் கேட்டசின்களின் அளவு குறையும்.

இடைவெளி அவசியம்
டீ அல்லது காபி குடிக்க வேண்டுமானால், உணவு உண்பதற்கு முன் மற்றும் பின் குறைந்தது ஒரு மணிநேரம் இடைவெளி விட வேண்டும். ஏனெனில் இவற்றில் உள்ள டானின்கள் இரும்புச்சத்து உறிஞ்சுவதில் இடையூறை ஏற்படுத்தும்.

மிதமான அளவே நல்லது
டீ மற்றும் காபி பிரியர்களாக இருந்தாலும், அவற்றை மிதமான அளவில் குடித்தால் மட்டுமே, நன்மைகளைப் பெற முடியும். ஒருவர் மிதமான அளவில் காபி மற்றும் டீயைக் குடித்தால், தசை மற்றும் மன சோர்வில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

யார் குடிக்கக்கூடாது?
உணவு வழிக்காட்டுதல்களின் அறிக்கையின் படி, இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள், காபி குடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என பரிந்துரைக்கிறது. ஏனெனில், அப்படி குடிப்பதால், இரத்த அழுத்தம் அதிகரித்து, இதய துடிப்புக்களில் அசாதாரணங்களை ஏற்படுத்துமாம்.

எந்த டீ சிறந்தது?
உணவு உட்கொண்ட பின் டீ அல்லது காபி குடிக்க விரும்பினால், இஞ்சி டீ அல்லது க்ரீன் டீயைத் தேர்ந்தெடுத்து குடியுங்கள். ஏனெனில் இந்த வகை டீ தான் உணவுகளை செரிமானம் செய்வதற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
Previous Post Next Post