போலி கணக்குக்கு `வெரிஃபைட் அக்கவுன்ட் பேட்ஜ்' - ஒரு ட்விட்டர் சுவாரஸ்யம்!

ட்விட்டரில் போலி கணக்கு ஒன்றைத் தொடங்கி அதற்கு வெரிஃபைட் அக்கவுன்ட் பேட்ஜ் (Verified Account Badge) வாங்கிய சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. 2020-ல் அமெரிக்காவில் தேர்தல் நடக்கவுள்ளது. அதில் போட்டியிடும், ஆன்ட்ரியூ வால்ஸ் (Andrew Walz) என்பவர் பெயரில் போலி கணக்கு ஒன்றைத் தொடங்கி அதற்கு வெரிஃபைட் அக்கவுன்ட் பேட்ஜையும் பெற்றுள்ளார், அங்கு உள்ள பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவர்.

Twitter

அமெரிக்காவில் தேர்தல் நடக்கவுள்ளதால் சரியான வேட்பாளர்களை மக்களுக்கு அடையாளம் காட்டும் வண்ணம், அவர்களுக்கு வெரிஃபைட் பேட்ஜை கொடுத்து வருகிறது ட்விட்டர். இந்நிலையில்தான் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வால்ஸின் பெயரில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவம் கண்டறியப்பட்ட பின்னர், அந்தக் கணக்கு முழுவதுமாக முடக்கப்பட்டதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதைப் பற்றி அந்த மாணவர் கூறுகையில், ``வால்ஸ் தொடர்பான இணையதளம் ஒன்றை உருவாக்க 20 நிமிடமும் ட்விட்டர் கணக்குத் தொடங்க 5 நிமிடமும் மட்டும்தான் தேவைப்பட்டது. எனக்கு ட்விட்டர் மிகவும் பிடிக்கும். அதுதான் நான் நிறைய கற்றுக்கொள்ள உதவுகிறது" எனத் தெரிவித்துள்ளார். மேலும் விடுமுறை காலத்தில் பொழுதுபோக்குக்காக மட்டுமே இதைச் செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Suspended Account

ஆனால், இந்தச் சம்பவம், ட்விட்டர் நிறுவனம் அமெரிக்க தேர்தலுக்கு எந்த வகையில் தயாராகியுள்ளது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. 2009-ம் ஆண்டில் இருந்தே வெரிஃபைட் அக்கவுன்ட் பேட்ஜை ட்விட்டர் நிறுவனம் வழங்கி வருகிறது. பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு வழங்கி வந்தது. பின்னர் பத்திரிகையாளர்களுக்கும் வழங்கப்படுகிறது.
Previous Post Next Post