அசுர வேகத்தில் பரவும் கொரோனா: அமெரிக்காவில் ஊரடங்கு அறிவிப்பு – மொத்த உயிரிழப்பு 11,300!

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 60 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைகக் கடந்துள்ளது.

சீனாவில் இருந்து கடந்த ஆண்டின் இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் 186 நாடுகளில் பரவியுள்ளது.

அனைத்து நாடுகளிலும் சேர்த்து இன்று (சனிக்கிழமை) அதிகாலை வரையிலான 24 மணித்தியாலத்தில் மட்டும் 1,282 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நேற்றைய நிலைவரப்படி உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 300ஆக அதிகரித்துள்ளதாக அமெரிக்காவின் Johns Hopkin பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

நாளுக்கு நாள் அதிவீரியத்துடன் பரவிவரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு 7,800 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அமெரிக்காவின் நியூயோர்க் மற்றும் இல்லினாய்ஸ் ஆகிய இரு மாகாணங்களில் நாளை இரவு 8 மணி முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 7 கோடி அமெரிக்க மக்கள் வீடுகளிலேயே முடக்கப்படுகிறார்கள். நியூயோர்க்கில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 7,800 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், அமெரிக்காவின் மன்ஹாட்டன், லொஸ் ஏஞ்சலஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. இதனிடையே மெக்சிகோ, கனடா எல்லைகளை மூடுவதற்கான நடவடிக்கையில் அமெரிக்க அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் ஏற்கனவே 19 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மட்டும் 41 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அந்நாட்டின் பாதுகாப்புத்துறை வளாகமான பென்டகனில் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் கடந்த சில தினங்களாக உயிரிழப்புகள் ஏதுமற்ற நிலையில் நேற்றும் அதேநிலை தொடர்ந்துள்ளது. அங்கு மட்டும் 81 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் புதிதாக தொற்று ஏதும் அறிவிக்கப்படவில்லை.

இதேவேளை, ஐரோப்பிய நாடுகளில் இதுவரை 5 ஆயிரம் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதுடன் இத்தாலி, ஸ்பெயின் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இத்தாலியில் கொரோனா வைரஸ் அசுரவேகத்தில் பரவிவரும் நிலையில் அங்கு நேற்று ஒரேநாளில் மட்டும் 627 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு மொத்தமாக 4032 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, உலகம் முழுவதிலும் 87 ஆயிரம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post