யாழில் 15 பில்லியன் ரூபா செலவில் வீதிகள் புனரமைப்பு!

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற ஒருங்கிணைந்த வீதி முதலீட்டுத் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாண மாவட்டத்தில் வீதி புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதன்படி, இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் இன்று (01) இடம்பெறவுள்ளது.

இதன்படி, யாழ்ப்பாண மாவட்டத்தில் 273 கிலோமீற்றர் வீதிகள் புனரமைப்பு செய்யப்படவுள்ளன.

இந்த நிலையில், யாழ்ப்பாண மாவட்ட வீதிப் புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக, சுமார் 15 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நாட்டில், போக்குவரத்து திறனை மேம்படுத்துவதன் மூலம் கிராமப்புற சமூகங்கள் மற்றும் சமூக பொருளாதார மையங்களுக்கு இடையிலான இணைப்பை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.

மூன்று வருடங்களுக்குள் நாடு முழுவதும் கிராமப் புறங்களில் உள்ள சுமார் மூவாயிரம் கிலோமீற்றர் வீதிகளை புனரமைப்பு செய்யும் நோக்கில், அரசாங்கத்தினால் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.Previous Post Next Post