இத்தாலியில் சிக்கித் தவித்த 263 இந்திய மாணவர்கள் மீட்பு!

கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவரும் இத்தாலியின் ரோம் நகரில் சிக்கித் தவித்த இந்திய மாணவர்கள் 263 பேர் விமானம் மூலம் புதுடெல்லிக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இத்தாலியில் கல்வி பயின்றுவரும் இந்திய மாணவர்கள் பலர் கொரோனா வைரஸ் காரணமாக நாடு திரும்பமுடியாமல் தவித்து வந்ததையடுத்து அந்த மாணவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.

இதற்காக எயார் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான 787-டிரீம்லைனர் விமானம் நேற்று மதியம் 2.30 மணிக்கு டெல்லியில் இருந்து ரோம் நகருக்குச் சென்றது. இதையடுத்து அங்கு தங்கியிருந்த 263 இந்திய மாணவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்துவரப்பட்டனர்.


நாடு திரும்பிய அனைவருக்கும் கொரோனா வைரசுக்கான முதற்கட்ட பரிசோதனை செய்யப்பட்டு டெல்லியில் உள்ள இராணுவ மருத்துவ முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 188 நாடுகளில் பரவியுள்ளது.

உலகம் முழுவதும் இதுவரை 3 இலட்சத்து 7 ஆயிரத்து 725 பேருக்கு இந்த வைரஸ் வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் 13 ஆயிரத்து 54 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்துள்ள நிலையில் இறுதி அறிவிப்பின் படி 315 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post