நாடாளுமன்றத் தேர்தலுக்கு 5.5 – 7.5 பில்லியன் செலவு!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு சுமார் 5.5 பில்லியன் ரூபாய் செலவுகள் ஏற்படும் என்றும் ஆனால் தேர்தலில் பல அரசியல் கட்சிகள் போட்டியிட்டால் 7.5 பில்லியன் செலவுவரை ஏற்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, தற்போது தேர்தல்களை நடத்துவதற்கான எந்தவிதமான நிதி ஒதுக்கீடுகளும் இல்லை என்றும், இதன் காரணமாக, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதும், நிதி ஒதுக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது என்றும் கூறினார்.

2019 நவம்பரில் நாடாளுமன்றத்தில் கணக்கு சமர்பிக்கப்பட்டபோது, 2020 முதல் காலாண்டில் நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்த வேண்டிய அவசியத்தை அரசாங்கம் முன்கூட்டியே எதிர்பார்க்கவில்லை.

அத்தோடு அது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை என்பதனால் எதிர்வரும் தேர்தல்களுக்காக நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என மஹிந்த தேசப்பிரிய கூறினார்.

எனவே இந்த விடயம் குறித்து இராஜாங்க அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்லவிடம் வினவியபோது, "நாடாளுமன்றம் கலைக்கப்பட்டவுடன், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நிதி தொடர்பான அதிகாரங்கள் ஜனாதிபதிக்கு வழங்கப்படும்.

நாடாளுமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்படும்போது, அதற்கான நிதி ஜனாதிபதியால் கையாளப்படும், மேலும் தேவையின் அடிப்படையில் நிதியை தேர்தல் ஆணையத்திற்கு வழங்க தேவையான ஏற்பாடுகளை ஜனாதிபதி மேற்கொள்வார்" என கூறினார்.


Previous Post Next Post