76 பேரை தனிமையாக இருக்குமாறு ஹட்டன் நீதிமன்றம் உத்தரவு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வெளிநாடுகளில் இருந்து வந்து பெருந்தோட்டப்பகுதிகளில் தங்கியுள்ள 76 பேரை அவர்களின் வீடுகளில் பாதுகாப்பான முறையில் 14 நாட்களுக்கு தனிமையாக இருக்குமாறு ஹட்டன் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார் என அம்பகமுவ பகுதிக்கான சுகாதார வைத்திய அதிகாரி கிரிஷான் பிரேமசிறி தெரிவித்தார்.

ஹட்டனில் வைத்து இன்று ஊடகங்களுக்கு விடுத்த விசேட அறிவிப்பிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் கூறியதாவது,

மத்திய கிழக்கு நாடுகள் உட்பட ஏனைய நாடுகளில் இருந்து அண்மைய காலப்பகுதிகளில் பெருந்தோட்டப் பகுதிகளுக்கு வருகைதந்துள்ள 76 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களை தனிமைப்படுத்துவதற்கு சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்தாலும், அதிகாரிகளால் விடுக்கப்படும் அறிவுறுத்தல்களை அவர்கள் பின்பற்றவில்லை. 76 பேரில் 70 வீதமானோர் பெண்களாவர்.

இந்நிலையில் உரிய சுகாதார நடைமுறையை மேற்குறிப்பிட்ட நபர்கள் பின்பற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்குமாறு எமது அலுவலகம் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.

எட்டு பிரதான விடயங்களை கருத்திற்கொண்டே நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.

இதன்படி ஹட்டன், பொகவந்தலாவ, நோர்வூட், மஸ்கெலியா, நல்லத்தண்ணி, நோட்டன் பிரிட்ஜ், வட்டவளை மற்றும் கினிகத்தேனை ஆகிய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் ஊடாக சம்பந்தப்பட்ட நபர்களுக்கு, நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, கொவிட் – 19 பரவக்கூடிய பகுதியாக நுவரெலியா மாவட்டமும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த வைரஸால் எவராவது பீடிக்கப்பட்டால் அவரை கண்டி போதனா வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் செய்யப்பட்டுள்ளன என்றார்.


Previous Post Next Post
HostGator Web Hosting