முன்னோர்கள் செய்த யாகங்களில் உள்ள ஆன்மீக இரகசியம்!!

எமது முன்னோர்கள் தங்கள் வாழ்க்கையில் பல்வேறு வாழ்வியல் நடைமுறைகளை கடைப்பிடித்து வந்தார்கள். அவற்றை ஏனைய மக்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் அவற்றையெல்லாம் எமது சமய சடங்குகளில் சம்பிரதாயங்களாக சேர்த்து விட்டிருந்தனர். மஞ்சள் தெளித்தல், கோலம் போடுதல், சாம்பிராணி தூபம் காட்டுதல், வேப்பிலை தோரணமிடுதல், கதவு நிலைகளில் மஞ்சள் பூசுதல், பொட்டு வைத்தல், விபூதி தரித்தல், கோயில், சடங்கு, யாகம், அபிஷேகம் என பல அவற்றுள் அடங்கும். இவற்றையெல்லாம் இன்றைய பகுத்தறிவாளர்கள் என கூறிக்கொள்வோர் மூட நம்பிக்கைகள் என வாதிட்டாலும், இவற்றில் பல அரிய ஆன்மீகத் தத்துவங்கள் அடங்கியுள்ளன.

யாகமும் வாழ்வியலும்

“காமதேனு போன்று யாகங்கள், மனிதனுக்கு விரும்புவதைக் கொடுப்பவை” என சான்றோர் கூறுவர். அந்த வகையில் யாகங்கள் செய்வதன் மூலம் நாம் வேண்டிய வரங்களை பெற்றுக்கொள்ளலாம்.

எமது முன்னோர்கள் தங்கள் குறைகளை தீர்ப்பதற்காக பல வகையான யாகங்களை செய்துள்ளனர். மன்னர்கள் தங்கள் நாட்டில் மழை பொய்த்து வறட்சி தாண்டவமாடும்போது மழை வேண்டி வருணயாகம், குழந்தைகள் இல்லாமல் தவித்திருந்தபோது புத்திரகாமகஸ்தி யாகம், நோய்கள் பரவி ஊளித்தாண்டவமாடும்போது தன்வந்திரி யாகம், நாட்டு மக்களின் நன்மைக்காக அஸ்வமேத யாகம் என பல்வேறு யாகங்கள் செய்து தமது வேண்டுதல்களை நிறைவேற்றியிருந்தார்கள் என எம் புராண நூல்கள் சான்று பகருகின்றன.

அதேபோன்று எமது அண்டைய நாடான பாரத தேசத்தில் 1984ம் ஆண்டு போபால் நகரில் ஏற்பட்ட விஷ வாயு அனர்த்தத்தில் பல்லயிரக்கணக்கான மக்கள் பலியானபோது தங்கள் வீட்டில் தினமும் யாகம் (அக்னிஹோத்ர யாகம்) செய்துகொண்டிருந்த இரு குடும்பத்தினர் மட்டும் உயிர்பிழைத்திருந்ததைக் கண்டு விஞ்ஞானமே மூக்கில் விரலை வைத்து வியந்து பார்த்தது.

இன்றும் நாம் அன்றாடம் காணும் விடயங்களையே எடுத்துக்கொண்டோமானால், குழந்தை பிறந்த வீடுகளில் கண்டிப்பாக மாலை வேழையில் தூபம் போடுவார்கள், திருமணத்தின்போது ஹோமம் வழர்ப்பார்கள், இன்னும் பல நிகழ்வுகளிலும் யாகம், யக்ஞம், ஹோமம் என பல பெயர்களால் அழைக்கப்பட்ட சடங்குமுறைகள் இடம்பெறுவதை நாம் பார்த்திருக்கின்றோம்.

உண்மையில் யாகம் செய்யும்போது என்ன நடக்கின்றது?

யாகம் எனும் சடங்கு முறையானது தீயினை மூட்டி அதில் பல்வேறு வகையான ஓமத் திரவியங்களயும் மூலிகைகளையும் இட்டு இறைவனை ஆராதிக்கின்றோம். இங்கு தீ மூட்டப்படுவது சூரியனை முன்னிலைபடுத்துவதாகவும், அங்கு இடப்படும் திரவியங்களும் மூலிகைகளும் நம் வணங்கும் தெய்வத்தினை திருப்திப் படுத்துவதற்காக இடப்படுவதாக நம்பப்பட்டாலும், இன்றளவில் இந்த ஹோமத்தின் பயன்களை அறிவியல் பூர்வமாக பல விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். யாகத்தின் போது பாராயணம் பண்ணப்படும் மந்திரங்களின் ஒலியலைகள் அவற்றை ஓதுபவர்களில் மட்டுமல்லாது, கேட்பவர்கள் மற்றும் வானப்பரப்பில் நேரான அதிர்வலைகளை ஏற்படுத்தி அவர்களது மனதில் அமைதியை ஏற்படுத்துவதனூடாக எண்ணங்கள் வலிமை பெற்று வேண்டுதல்களை நிறைவேற்றும் வல்லமை படைத்தவை என கூறுகின்றனர். அதேபோன்று யாகத்தின்போது வரும் புகையானது மனிதர்களிலும் சுற்றுப்புற சூழலிலும் நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துவதுடன், சிறந்த கிருமிநாசினியாகவும் தொழிற்பட்டு எம் சுற்றாடலை தூய்மையாக்குவதன்மூலம் மக்களையும் உயிரினங்களையும் கொடிய தொற்றுநோய்களிலிருந்து காக்கின்றது என கூறியுள்ளனர்.

விஞ்ஞானிகளின் கருத்துப்படி யாகம் செய்யும்போதும் மந்திர பாராயணம் செய்யும் போதும், தியானத்தில் ஈடுபடும் போதும் எம்மைச் சுற்றி ஒரு ஆரா(Aura) உருவாகின்றது. ஆரா எனப்படுவது ஒரு கண்ணுக்கு புலப்படாத சக்தி வளையம் எனலாம். இதனையே எம் தெய்வங்களை சுற்றி ஒளிவட்டம் போன்று காட்டியிருப்பார்கள். எம் மனச்சக்தி அதிகரிக்கும்போது இந்த ஆரா சக்தி அதிகரிக்கின்றது. இது எம்மை தீய சக்திகள் அண்டவிடாது காக்கின்றது.

ஆச்சிரமங்களில் யாகம்.

அந்த வகையில் எமது பக்தர்களின் மனச் சக்தியினை தூண்டி அவர்களது ஆராவினை வலுவடையச் செய்து துன்பங்களிலிருந்து மக்களைக் காக்கவே எம் குருநாதர் மகாயோகி புண்ணியரெத்தினம் சுவாமிகளினால் எமது ஆச்சிரமங்களில் மாதந்தோறும் பூரணை தினங்கள், அமாவாசை தினங்கள், புதுவருடப்பிறப்பு, மகா சிவராத்திரி, மற்றும் ஏனைய விசேட தினங்களிலும் மகாயாகம் நிகழ்த்தப்படுகின்றது. இதனையே எம் குருநாதரின் குருநாதர் பகவான் காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகளும் ஏறத்தாழ 40 ஆண்டுகளாக செய்தார்கள். எம் குருநாதர் கடந்த 16 ஆண்டுகளாக செய்துவருகின்றார்.

தினமும் காலையும் மாலையும் தவறாது ஜெப தியானங்கள் செய்து பிராத்தனைகளின் ஈடுபடுவோருக்கு, யாகங்கள் செய்பவர்களுக்கு மன சக்தி அதிகரிப்பதுடன் கண்ணுக்கு புலப்படாத ஆராவின் வீச்சும் அதிகரிக்கின்றது. இவ் ஆராவானது ஒரு சக்தி வளையமாக எம்மைச் சுற்றி இருந்து எம்மை தாக்க எத்தனிக்கும் தீய சக்திகளையும் தீய எண்ணப் பிரபாவங்களையும் தடுத்து மன அமைதியையும் உடல் ஆரோக்கியத்தையும் பெற உதவுகின்றது. இவ்வாறு நாம் மெற்கொள்ளும் தியான ஜெபங்கள் மற்றும் யாகங்கள் எம்மில் மட்டுமல்லாது இத் தியான ஜெபங்களில் மற்றும் யாகங்களில் பங்குபற்றும் அனைவருக்கும் மனதில் அமைதியையும் சக்தி வலையமைப்பையும் ஏற்படுத்தி அவர்களையும் காக்கும் வல்லமை படைத்தது. இதன் காரணமாகவே எம் குருநாதர் புண்ணியரெத்தினம் சுவாமிகள் வியாழன் தோறும், மற்றும் பௌர்ணமி தோறும் தவாறாது பூசைகளிலும் யாகங்களிலும் கலந்துகொள்ளுங்கள் என அனைவரையும் இருகரங்கூப்பி அழைக்கின்றார்கள். இவ்வாறு இடைவிடாது கலந்துகொண்டவர்கள் தங்கள் துன்பங்களிலிருந்து விடுபட்டு இன்பமாக தொடர்ந்தும் இவ்வழிபாட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்வதனை எமது ஆச்சிரமங்களில் என்றும் காணலாம்.

உலகம் விஞ்ஞானமயமாகி மக்கள் ஆன்மீகத்தினை விட்டு உலகாதி இன்பங்களை அதிகம் நுகர ஆரம்பித்துவிட்டதால் உலகில் பல்வேறு பொருளாதார சிக்கல்கள், நோய்கள், வறட்சி, போர்ச்சூழல் என்பன ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு எனவும் அவற்றிலிருந்து இவ்வுலகை ஆன்ம ஞானிகளினால் மாத்திரம்தான் காப்பாற்ற முடியும் என முருகேசு சுவாமிகள் சமாதியடைவதற்கு முன்னர் கூறியுள்ளதை சுட்டிக்காட்டும் புண்ணியரெத்தினம் சுவாமிகள், எவ்வித பிரதிபலன்களையும் எதிர்பாராமல் தம்மை அண்டிவரும் பக்தர்கள் ஆன்ம ஈடேற்றம் பெற வழிகாட்டி வருகின்றார்கள்.

விசேடமாக கடந்த சில மாதங்களாக உலகம் எதிர்நோக்கவுள்ள சிக்கல்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் எச்சரித்து வந்துள்ள சுவாமிகள், உலகை தற்போது வதைத்துக்கொண்டிருக்கும் தொற்றுநோயிலிருந்து மக்களை காப்பற்ற வேண்டி, சிவராத்திரியின்போதும், பங்குனி மாத பூரணையின்போதும் இடம்பெற்ற மகாயாகங்களில் இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட சக்திவாய்ந்த மூலிகைகளுடன், மஞ்சள், வேப்பிலை, மிளகு போன்ற இயற்கை தொற்றுநீக்கிகளை ஆகுதியாக இட்டு வாழிபாடுகளை மேற்கொண்டிருந்தார்கள்.

வீடுகளில் யாகம்

அந்த வகையில், யாகம் எம்மை மட்டுமல்ல எம் சுற்றுச்சூழலிலும் நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தி பிரபஞ்சத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி சகலவிதமான துன்பங்களிலிருந்தும் விடுதலை பெற உதவும் . எனவே இன்று நாட்டில் நிலவும் இக்கட்டான சூழ்நிலையில் நாம் வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ள வேளையில், அனைவரும் அதிகாலையிலும் மாலையிலும் காயத்ரி மகாமந்திரம், மகா மிருத்யுஞ்ஜெய மந்திரம் போன்றவற்றை தவறாது பாராயணம் பண்ணி தியானம் பண்ணுவதுடன், இயலுமானவர்கள் தங்கள் வீடுகளில் இம்மந்திரங்களை ஓதி யாகங்கள் செய்வதும் எம்மையும், எம் உறவுகளையும், உலகையும் இக்கொடிய கொள்ளைநோயில் இருந்து காக்க உதவிடும் என சுவாமிகள் கூறுகின்றார்கள்.

எனவே பக்தர்கள் அனைவரும் சுயநலம் பாராது இக்கொடிய நோயில் இருந்து உலக மக்கள் அனைவரையும் காப்பாற்ற வேண்டி நம் இஷ்ட தெய்வங்களை பிராத்தித்து, யாகங்கள் செய்து அதி விரைவாக உலகம் மீண்டெழ பிராத்திப்போமாக!
Previous Post Next Post