முப்படையினரைக் கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது என்கிறார் ராஜித

யுத்தத்தை நிறைவு செய்ததைப் போன்று முப்படையினரைக் கொண்டு கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், "கடந்த 5 வருட கால ஆட்சியில் எம்மால் ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டு அவற்றுக்கு வழங்கப்பட்ட உரிமையின் காரணமாகவே அரசியல் ரீதியான தீர்வை புறந்தள்ளி தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை ஒத்தி வைப்பதற்கு சுதந்திரமாக முடிவை எடுத்துள்ளது.

யுத்தத்தின் போது முப்படையினரைக் கொண்டு பயங்கரவாதத்தை ஒழித்ததைப் போன்று அப்போதைய பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் கொரோனா வைரஸையும் கட்டுப்படுத்த முடியும் என்று எதிர்பார்ப்பது தவறாகும்.

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தவுடனேயே தேர்தல்கள் ஆணைக்குழு தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி தினத்தை அறிவிக்காமல் தேர்தலை ஒத்தி வைத்துள்ளது.
எனினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் சுகாதார அமைச்சரும் தேர்தலை ஒத்தி வைக்க முடியாது என்றும் அதற்கான அவசியம் இல்லை என்றும் தெரிவித்து வந்தனர்.

அவ்வாறான அரசியல் ரீதியான தீர்மானங்களை மீறி தேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீனமாக தீர்மானமெடுத்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். காரணம் தற்போது தேர்தலில் வெற்றி பெறுவது முக்கியமல்ல. நாட்டைப் பாதுகாப்பதே முக்கியமாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Previous Post Next Post
HostGator Web Hosting