வாழைச்சேனையில் பல்வேறு இடங்களில் தொற்றுநீக்கி விசிறல்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினை கருத்திற் கொண்டு கொரோனா வைரஸ் தொற்றினை தடுக்கும் நோக்குடன் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையினால் மக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பொது இடங்களில் தொற்றுநீக்கி இரசாயனத் திரவம் விசுறும் நடவடிக்கை இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் கல்குடா பொலிஸ் நிலையம், வாழைச்சேனை பேருந்து தரிப்பு நிலையம், பேத்தாழை பேருந்து தரிப்பு நிலையம், பாசிக்குடா சுற்றுலா பிரதேசங்கள் மற்றும் சந்தைத் தொகுதி போன்ற பொது இடங்களில் இந்த செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

பிரதேச சபையின் தவிசாளர் ஸோபா ஜெயரஞ்சித்தின் பணிப்பிற்கமைய இரசாயன திரவம் விசிறும் இயந்திரம் கொள்வனவு செய்யப்பட்டதோடு வாழைச்சேனை சுகாதார வைத்திய அத்தியட்சகர் மற்றும் சுகாதார வைத்திய பரிசோதகர்களின் வழிகாட்டலில் இந்த செயற்றிட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள தையற் கடையின் உரிமையாளரான எம்.எம்.அரபாதினால் கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளரிடம் முகக்கவசங்கள் கையளிக்கப்பட்டது. இதனை கோறளைப்பற்று பிரதேசசபை தவிசாளரினால் சபையின் எல்லைக்குட்பட்ட முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு முகக்கவசங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள வைரஸ் தொற்று காரணமாக வர்த்தக நிலையங்களில் முகக் கவசங்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள இந்நிலையில் இந்த முகக்கவசங்கள் குறித்த வர்த்தகரினால் தவிசாளரிடம் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது பிரதேச சபையின் தவிசாளர் ஸோபா ஜெயரஞ்சித்தினால் கொரோனா வைரஸ் தொற்றினை தடுக்கும் நோக்கில் செயற்படும் வண்ணம் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களையும் வழங்கி வைத்தார்.
Previous Post Next Post