இன்றைய காலகட்டத்தில் சைவாலய மஹோற்சவங்களை செய்யலாமா? (விசேட இணைப்பு)
கொரோனா தொற்றுநோய் பரவிவரும் இன்றைய காலகட்டத்தில் பல கோவில்களில் மஹோற்சவ காலம் வந்துவிட்டது. இப்போது நம் முன் மூன்று கேள்விகள் எழுகின்றன.


1. எப்பாடுபட்டும் மஹோற்சவம் செய்வதா? செய்யாமல் விடலாமா?
2. செய்யாமல் விட்டால் என்ன பிராயச்சித்தம்?
3. பின்னர் எப்போது செய்வது?

முதலில் சுருக்கமாக இவற்றுக்கான இறுக்கமான பதில்.

1. மஹோற்சவம் முதலிய உற்சவங்களை ஒத்திவைப்பதே முறை.

2.சாந்திஹோமம், திசாஹோமம், ஸ்நபனாபிஷேகம் என்பவையே பிராயச்சித்தம். இவற்றைவிட, பொதுவாக தோஷ நிவிர்த்தியாக அகோராஸ்திர, பாசுபதாஸ்திர மந்திரங்கள் இயன்ற அளவு ஜபம், ஹோமம் செய்யுமாறு சொல்லப்படுகிறது.

3. நிலைமை சீரான உடன் அடுத்துவரும் அதே பட்சம் அல்லது நட்சத்திரத்தில் - பங்குனி உத்தரம் என்றால் சித்திரை உத்தரம் அல்லது வைகாசி உத்தரம் இவ்வாறு........ சிறப்பாக மஹோற்சவம் செய்யவேண்டும். ஆனால், அடுத்த ஆண்டில் உரிய பட்சத்திலேயே செய்யலாம். காலம் மிகவும் கடந்துவிட்டால், இவ்வாண்டுக்குரிய மஹோற்சவத்தை நிறுத்தி, அடுத்த ஆண்டு அதே நாளில் நடத்தவேண்டும். அதற்குமுன் அதிகபட்ச பிராயச்சித்தமாக சம்புரோட்சணம் செய்யலாம்.

சற்று விரிவாக நோக்குவோம்.

நமக்கு இவ்விடயங்களில் சிவாகமமே பிரமாணம். அதற்கு அடுத்தபடியாக, அகோர சிவாசாரியார் பத்ததி. இவற்றை ஆராய்ந்து சில கருத்துக்களை முன்வைக்கிறேன். முதலில் ஒன்றை விளங்கவேண்டும். சுருதி, யுக்தி, அனுபவம் என்ற மூன்றின் அடிப்படையிலேயே இத்தகைய பிரச்சினைகளை அணுகவேண்டும். முதலாவதாகிய சுருதிப்பிரமாணமே ஆகமம். அவற்றில் கூறப்பட்ட சில கருத்துக்களை (அகோர சிவாசாரியார் பிராயச்சித்த விதி, உத்தர காரணாகமம், பூர்வ காமிகம்) இங்கு புகைப்படப் பிரதியாகத் தந்துள்ளேன்.

மஹோற்சவம் தடைப்பட்டால் பிராயச்சித்தம் செய்து உடனே மறுபடி அதைவிட இரண்டு அல்லது மூன்று மடங்காகச் செய்க என்பதே இவற்றின் பொதுக் கருத்து. அதாவது சிராத்தம் முதலியன ஆசௌசத்தால் தடைப்படின் ஆசௌச முடிவில் அதனைச் செய்க என தர்மசாஸ்திரம் கூறுவதுபோல.

1. பூசைகள் தடைப்பட்டால் நாட்டுமக்களுக்குக் கேடு,

2. நோய், யுத்தம் முதலிய காலங்களில் சிறப்பாக ஆலய விழாக்களைச் செய்க

என்ற சிவாகம விதிகளையும், முன்னவனார் கோயில் பூசைகள் முட்டிடின்
மன்னர்க்குத் தீங்குள மாரி மழை குன்றும் என்பதுபோன்ற திருமந்திர வாக்கியங்களையும் காட்டி எப்பாடுபட்டாவது திருவிழாவை நடத்த முற்படுவோர் முதலாவது விதியாகிய சுருதிப் பிரமாணத்தை மட்டும் கண்ணை மூடிக்கொண்டு பேசுகின்றனர். ஊரடங்கு வேளையில் இரவுத்திருவிழாவைப் பகலிலேயே செய்தமையும், யுத்த காலத்தில் திருவிழாவைச் செய்யாமலே ஓடியதும் யுக்தி, அனுபவப் பிரமாணங்களாகும்.

முற்காலத்தில் மக்கள் குடியிருப்புக்கும் கோவில்களுக்குமிடையில் மிக நீண்ட இடைவெளி இருக்கும். மக்கள் நோயுற்றிருந்தால் அரச பிரதிநிதிகளும், ஆலய அர்ச்சகர்களும் மட்டும் ஆலயத்தில் நின்று உற்சவங்களை நடத்த வாய்ப்பு இருந்தது. யுத்தம் நடந்தாலும் அது மக்கள் இருக்குமிடத்தில் நடப்பதில்லை. ஆனால், இப்போதுள்ள நிலைமை வேறு. மேலும், இத்தகைய துன்ப நிலைமைகளில் தடைப்படக்கூடாது என சிவாகமங்கள் வலியுறுத்துவது நித்திய பூசையையே எனப் புரிந்துகொள்ளவேண்டும்.

பிராயச்சித்தத்தை சாதாரண நடைமுறையைவிட இரண்டு அல்லது மூன்று மடங்கு சிறப்பாகச் செய்க என ஆகமம் கூறுவதால் நாம் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும். உரிய முறைப்படி செய்யவேண்டும். அல்லது பின்னர் இன்னும் சிறப்பாகச் செய்யவேண்டும். எனவே அரைகுறையாகச் செய்யக்கூடாது.

தற்செயலாக மஹோற்சவம் ஆரம்பித்து இடையில் தடைப்படநேருமாயின், அது மஹோற்சவம் பிற்போடப்படுவதைவிடப் பாபமானதாகும்.

மக்களுக்காகவே ஆலயங்கள். அவர்களுக்குத் தீங்கு நேராமல் அங்குள்ள காரியங்கள் நடைபெறவேண்டும். அடுத்து ஆகமங்களில் அரச கட்டளைக்கு மிகுந்த முக்கியம் கொடுக்கப்படுகிறது. அவற்றால் தோஷமேற்படின் அது அரசனையே சாரும். அண்மையில் ஒரு பிரபல கோவிலி;ல் அரச கட்டளையை தட்டாமல் மிகச்சில அடியார்களுடன் பூட்டப்பட்ட ஆலயத்தினுள் கொடியேற்றம் நடந்தது. ஆனால் பூட்டிய கதவிற்கு வெளியே அடியார் கூட்டம் அலைமோதியது. இது சரியா? நோய் பரவ வாய்ப்பல்லவா?

இப்போதுள்ள சூழ்நிலையில் பல உபயகாரருக்கு பொருளாதார நிலைமை மோசமாக இருக்கும். பொருளின்மை காரணமாகத் தடைப்படுதல் எனவும் ஒரு வாக்கியம் ஆகமத்தில் காண்க. மேலும், பதிபுண்ணியம் மட்டுமல்லாமல் பசுபுண்ணியம் செய்யவேண்டிய கடமையும் ஆலய சபைகளுக்கு உண்டு. அருகிலுள்ள வறியவர்களுக்கு உதவவேண்டிய கட்மையும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும். பல ஆலயங்களில் மஹோற்சவம் நடத்தாமலை பாலஸ்தாபனம் செய்துவிட்டு அந்தத் திருவிழாச் செலவை உபயகாரர்களிடம் பெற்று திருப்பணி செய்கின்ற அவலம் நடைபெறுவது உண்டு. இது ஆகம விரோதம். அதைக்காட்டிலும், இப்போது அதே முறையில் பணத்தைச் சேர்த்து அன்றாடம் காய்ச்சிகளுக்குக் கொடுத்தால் அது கோடி புண்ணியமாகும்.


நன்றி- Sivananda Sarma
Previous Post Next Post