வட மாகாண எல்லைகளை மூடுங்கள்!- சிவமோகன் கோரிக்கை!

வடக்கு மாகாண எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்வருவோரும் வெளிச்செல்வோரும் தீவிரமாகக் கண்காணிக்கப் படவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அப்படிச்செய்தால் நாம் பாதுகாக்கப்படலாம் எனவும் இல்லாவிட்டால் நாம் பேரழிவைச் சந்திக்கவேண்டிவரும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

வவுனியாவில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் கூறுகையில், "உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்கம் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வடமாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் குறித்த தாக்கத்திற்குள்ளாகியதாக எவரும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும் அவ்வாறனவர்களை இனங்காண்பதற்கான வசதிகள் இங்கு உள்ளதா என்ற கேள்வி எழுகின்றது.

குறிப்பாக அதிகமானோர் பாதிக்கப்பட்பட்டால் அவர்களை பராமரிக்கக்கூடிய அதிதீவிரப் பிரிவின் கட்டில்கள் வடக்கில் உள்ளதா என்று பார்க்கவேண்டும். வடக்கில் யாழ். வைத்தியசாலையில் 13 கட்டில்களும் வவுனியா வைத்தியசாலையில் 4 கட்டில்களும் முல்லைதீவில் இரண்டு மற்றும் கிளிநொச்சியில் 3 என மொத்தம் 22 கட்டில்களே வடக்கில் இருக்கின்றன. அவையும் பாவனையில் உள்ளன. இப்படியான சூழலில் கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டால் எப்படி மக்களைக் காப்பாற்றப்போகிறோம் என்பது இங்கு பாரிய பிரச்சினையாகும்.

அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை இனங்காணக்கூடிய பி.சி.ஆர். என்ற இயந்திரம் வடக்கில் எங்கும் இல்லை. எனவே வவுனியா மற்றும் யாழ். வைத்தியசாலைகளுக்கு அந்த வசதிகள் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும். அத்துடன் தற்போது அனைவரும் அணிந்துள்ள முகக் கவசம் கூட தகுதியற்றது. அதனூடாக வைரஸ் இலகுவாக உட்செல்லும் வாய்ப்புள்ளது.

குறித்த வைரஸ், கண்களின் ஊடாகக்கூட செல்லும் நிலை உள்ளது. எனவே 'என்-95' என்ற முகக்கவசமே தரமானது. எனவே வைத்தியசாலைகளில் கடமையாற்றும் ஊழியர்களுக்குக்கூட அந்த கவசத்தை வழங்கும் நிலையில் இந்த அரசாங்கம் இல்லை. எனவே வைத்தியசாலை ஊழியர்களுக்கும் இது வழங்கப்படவேண்டும். இல்லாவிட்டால் அவர்களூடாகவே இது பரவக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. இவ்விடயத்தில் அரசாங்கம் வெளிப்படைத் தன்மை இன்றியே செயற்பட்டு வருகின்றது.

வெளிநாட்டுப் பயணிகள் வவுனியா, பலாலி, கேப்பாப்பிலவு, இரணைமடு போன்ற விமானத் தளங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இது தொடர்பான தகவல்கள் எவையும் சுகாதாரப் பிரிவினருக்கு வழங்கப்படவில்லை. சுகாதார வைத்திய அதிகாரிகள் அவர்களைப் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. நாம் படையினரின் செயற்பாடுகளை மதிக்கின்றோம். எனினும் இது வெளிப்படைத் தன்மையானதல்ல. எனவே மாகாண மட்டத்தில் ஒரு விசேட செயலணி உருவாக்கப்பட வேண்டும். அதில் இராணுவத்தினரும் உள்வாங்கப்பட வேண்டும். அதில் தீர்மானம் எடுப்பவர்களாக சுகாதாரப் பிரிவினர் இருக்கவேண்டும். இராணுவ நகர்வுகள் மூலம் மாத்திரம் இதனைக் கட்டுப்படுத்த முடியாது.

அத்துடன், பிரதேச தனிமைப்படுத்தல் முறை உருவாக்கப்படவேண்டும். வடக்கில் தற்போது குறித்த தொற்று எவருக்கும் இல்லை. எனவே மக்களை சுதந்திரமாக வாழவிட்டு வடமாகாண எல்லைகள் அனைத்தும் இராணுவத்தைக் கொண்டு மூடச்செய்யப்பட்டு உள்வருவோரும் வெளிச்செல்வோரும் தீவிரமாககண்காணிக்கபடவேண்டும்' அப்படிசெய்தால் நாம் பாதுகாக்கபடலாம் இல்லாவிடில் நாம் பேரழிவைசந்திக்கவேண்டிவரும்.என்றார்.



Previous Post Next Post