புளியங்குளத்துக்காரன்- அவன் டைரியில் இருந்து....; நீலாவணை இந்திரா!!

எனக்கு தெரியும் சேர்,நீங்க நீங்களா இருக்கிற வரைக்கும் நான் நாயாத்தான் இருக்கணும்னு நீங்க எதிர்பார்க்கிற வரைக்கும் இங்க எதுவுமே மாறாது. இப்படித்தான் இருக்கும்.

இந்த ஒற்றை வாக்கியத்தில் மனதை உடைய வைத்தவன். சமூகத்தை ஒட்ட வைக்க முயற்சித்தவன் தான் இந்தப் புளியங்குளத்துக்காரன். 

கட்டுரைகள் என்கிற பெயரில் தன் பால்யத்தின் டயரியை புரட்டி ஒவ்வொரு ரணங்களையும் கதை வடிவில் நீட்டியிருக்கிறான் அந்தப் படைப்பாளி. 

காயம் பட்ட இடத்தில் வருகின்ற தழும்பினை உரச உரச அது காயத்தின் மூளை உணரும் வலியை கடந்து விட்ட நிலையிலும் காயத்தின் மூலத்தை, காயத்தின் மன வலியினை உணர்த்திக் கொண்டேயிருக்கும். 

வாரம் - 1
அவன் டைரியில் இருந்து....
ஒரு உறைக்குள்ளே தன்னைப் போட்டுக்கொண்டு நெளிந்தபடி, சுருண்ட படி, அசைந்தபடி, ஊர்ந்து கொண்டிருக்கும் கூட்டுப்புழுவிற்குத்தான் தெரியும் அதன் அவஸ்தை என்னவென்று. அவனுக்கும் அப்படித்தான். நான் நான் என்றுதானே எழுதினாய் இப்போது அவன் என்கிறாயே என்று உங்கள் ஆழ்மனது சொல்வது எனக்குத் தெரிகிறது. காதல் வந்த பின்னர் ரஜினி வடிவேலாவதும் விவேக் விஜயாவதும் எப்படிச் சாத்தியமோ அதே போல தான் எனக்குள் இருக்கின்ற அவனும் ;எனக்கு வெளியே தெரிவது சாத்தியம்.

அன்று சோவென்று மழை வகுப்பறையில் அவன், அவள், இன்னொருத்தி மட்டும் தான். முதல் தடவையாக காதலை சொல்வதென்று முடிவெடுத்து விட்டான். வானவெளி மண்ணில் அழுகி விழுந்த கதையாட்டாம் கனமழை. கூதலில் கொடுகிக் கொண்டிருந்த காகங்கள் இரண்டு அவன் வகுப்பறை ஜன்னலில் உட்கார்ந்து கொண்டு உடலை சிலுப்பிய படி இவனையே பார்ப்பதாக கரைகின்றது, ஏதோ பேசுகின்றது . அவன் காக்கைகளிடம் தூது விடுகிறான். புறாவிடு தூது போல காக்கை விடுதூது . இந்தக் கரடி இல்லாவிட்டால் சொல்விடலாம் என்று நினைக்கிறான். அது வேறு யாருமல்ல. வகுப்பில் இருந்தாளே அந்த இன்னொருத்தி. 

சொல்லப்போகிறான்...

சொல்லப்போகிறான்...

இதோ இதோ... இன்னும் ஒரு நொடியில் சொல்லப் போகிறான்.

மேடைகளில் முழங்கிவிடும் நாக்கு தடுமாறுகிறது. அந்த மூன்றெழுத்துப் பெயரை சொல்வதற்கு இடையில் முப்பது தடவை மூச்சு விட்டு விட்டான். நியூரோன்கள் சொல் சொல் என்று நச்சரித்தபடி கிடக்கிறது. காக்கைகள் கூட சொல் சொல் என்று பாவனை செய்வதாக எண்ணிக் கொள்கிறான். 

சொல்லப்போகிறான்...

நாவலன் ஆகி விட்டான்...

நுங்கு வேண்டி பனைமரம் ஏறப்போனவனை பாம்பு கடித்த நிலமை போல வெளியே கிடந்த லூசுகள் பட்டாளம் வகுப்பிற்குள் வந்து விட்டார்கள். அவர்கள் லூசுகள் தான் , பைத்தியங்கள் தான். சிவ பூசையில் கரடி இருந்த போது சொல்ல நினைத்ததே பெரும் பாடு இப்போது கரடிகள் கூட்டமே வந்துவிட்டதால் எப்படிச் சொல்வது. 

ஏனோ தெரியவில்லை அவள் அன்று மிகவும் அழகாத்தான் இருந்தாள். அவளை நினைத்து நினைத்து நிறையக்கவிகளை படைக்க நினைப்பான். ஆனால் அவன் அவளுக்காக கவிதைகளே எழுதியதில்லை. 

திடீரென்று பக்கத்து நிலவு பார்வையில் பால்வெளிச்சம் பொழிகிறது

பகலில், மழையில் நிலவா ? என்பதே உங்கள் சந்தேகம். நான் நிலவென்றது அவளைத் தான். விம்மி, வெடித்து, அழுது , புலம்பி காதல் சொல்கிறான். உதடுகளின் மைக்ரோ மீற்றர் அசைவில் உள்ளிருந்து காற்று கூட வெளியேறவில்லை, காதல் எப்படி வெளியேறும்.

தோற்றுப்போகிறான் காதலன்.

கவிப்பேரரசர் வைரமுத்து பேசுகிறார்....
ஒரு கால கட்டத்தில் சினிமாவை ஓடி ஓடிப்பார்த்தேன். ஊரின் சினிமாக் கொட்டகைகளில் எம்ஜிஆர், சிவாஜியின் படங்கள் வந்தால் போதும். பிறகு சென்னைக்கு வந்தவுடன் படங்களை தேர்வு செய்து பார்க்கத் தொடங்கினேன். இதை இதையெல்லாம் விட்டு விடலாம் என்று நினைத்தேன். இப்போது ஒரு படம் பார்ப்பதானால் யாராவது பாருங்கள் பாருங்கள் என்று சொல்ல வேண்டும். அப்படி நான் பார்த்த படங்களில் அந்தப் படமும் ஒன்று. அந்தப் படத்தில் நடித்த குமரி முத்து என் நண்பராதலால் அவரிடம் தொடர்பு கொண்டு அந்த இயக்குனரின் தொலைபேசி எண்ணைப் பெற்றுக்கொண்டேன். 

வாழ்த்தினேன்....
' ரொம்ப நல்லா பண்ணியிருக்கீங்க தம்பி.... '

வாரம் - 2

அவன் தனது கைகளை நீட்டிக் கொண்டிருந்தான். 
எப்போதும் பாடசாலை காலை உணவு இடைவேளையில் எங்கள் நால்வரினதும் சாப்பாட்டுப் பொதிகளிடையே கைகளை நீட்டியபடியே அவன் காத்திருப்பான். ஒவ்வொரு நாளும் நாங்கள் தனித் தனி உணவுகளை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, அவன் மட்டும் சுடுசோறும் சம்பலும், தோசை, இட்லி, கேண்டீனில் கமல்ராஜ் வாங்கி வருகின்ற கால் றாத்தல் பாணின் ஒரு துண்டு என வகை வகையாக சாப்பிடுவான். அவனைப் பார்த்தால் பாவமாக இருக்கும். வளர்ந்து கெட்டவன், ஒரு வருடம் பெயிலாகி எங்களுடன் வந்து தொற்றிக் கொண்டவன். அவனின் பெரும் பாலான காலைச் சாப்பாடே கேண்டீனில் விற்கப்படும் ஐந்து ரூபாய் மிக்சர் பக்கட் தான். அவன் பசியோடிருந்த நாட்களிலும் ஒருவருடைய சாப்பாட்டையும் அவன் களவெடுத்து பூனை போல திருடித் தின்றதாய் வரலாறு கிடையாது. 

ஆனால் எங்களில் ஒருவன் கேண்டீனில் வடை திருடி மாட்டுப்பட்டதற்கு தானே முன்வந்து அந்த வடையை 'நான் தான் எடுத்தேன்' என்றான். 

அப்போது பிரம்படி வாங்கியபடி அவன் சிரித்த அந்தச் சிரிப்பு.... கூனிக் குறுகி நின்ற நாங்கள்.

கொரோணா வந்து தமிழர்களின் மரபை மீட்டு விட்டதாம். இரு கை கூப்பி வணக்கம் சொல்லும் தமிழர் மரபு உலகெங்கும் உயிர்த்து விட்டதாம்...

தமிழனின் சாதியை வெளிக்காட்டியது தான் வணக்கம். உயர்த்தப்பட்ட சாதிக்காரன் கடவுளை மட்டுமே வணங்கினான், இல்லை தமக்கு சமமானவர்கள் என்று கருதியவர்களை மட்டுமே வணங்கினான். , தாழ்த்தப்பட்டவன் ' கும்பிடுறன் சாமி' என்று தலையில் கட்டிய துண்டை கக்கத்துக்குள் வைத்தும் அன்றேல் இடுப்பில் கட்டிய படியும் வணக்கத்தை குனிந்து கூழைக் கும்பிடு போட்ட சரித்திரம் தான் தமிழரின் வணக்கத்தின் வரலாறு.

இவர்கள் வணக்கத்தின் பால் தீண்டாமையைத்தான் வளர்த்தார்கள். உயர்த்தப்பட்ட சாதிக்காரன் பணிந்து போய்விடக்கூடாது, தாழ்த்தப்பட்ட சாதிக்காரன் இவர்கள் தொட்டுவிடக்கூடாது இது தானே உங்கள் வணக்கத்தின் கோட்பாடு.

கைலாகு கொடுப்பதென்பது உங்கள் வணக்கத்தை விட ஒரு படி மேலானதுதான் போல....

வணக்கத்திற்கும் வரவேற்பிற்கும் சம்பந்தம் கற்பிக்கின்ற தமிழர்காள்...
வணக்கத்தை தமிழ் வணக்கமாக வைத்துக் கொள்ளுங்கள், தீண்டாமையின் முதற்படியாக வைத்துக் கொள்ளாதீர்கள். தமிழரின் பெருமையை அழிக்க வந்த இந்திரா என்பீர்கள்... இங்கு யார் தமிழர்கள்? 

வாரம் - 3

பறவைகளின் கடிதம்

பறவைகள் விட்டுப் போன 

அத்தனை இறகுகளும் கடிதமென்று

அவன் சொல்வது உண்மையாக

இருந்தால்.......

பறவைகள் எனக்கும் கடிதமெழுதியிருக்கின்றன!

நான் வளர்த்த நேசப்பறவைகள்

கூட்டை நாயொன்று குறிவைத்த

இராத்திரியொன்றில்...

பள்ளி மண்டபத்தில் 

குடியிருந்த மோட்டுப்புறாவின்

முட்டைகளை சிலர் திருடியபோதில்...

சாரனுக்கு காய்ச்சி வைத்திருந்த

கஞ்சிப்பனையில் அலகால்

கொத்தி துணுக்குற்று சிறகடித்ததில்...

நாணல் புற்களுக்கிடையில்

வைத்த இழுவைச் சுருக்கில்

ஒன்றைக் காலுடைந்து ஓடுகையில்...

இப்படி எத்தனையோ கடிதங்களை பறவைகள் எனக்கு எழுதியிருக்கின்றன...உன்னைப் புடிச்சிருக்கு... நாளைக்கு கோவில்ல பார்ப்போம் என்று நான் எழுதிய கடிதத்திற்கு மட்டும் தான் அந்தப் பறவையிடம் இருந்து பதில் வரவில்லை...

சர்வம் தாளமயம் கதா நாயகன் ஜீவி தனது தந்தையுடன் கிராமத்திற்கு வருகின்ற காட்சி திரையில் ஓடுகிறது.

ஊரின் தேநீர்க்கடையில் கண்ணாடி டம்ளரில் போடப்படும் தேநீர். அவர்களுக்கு மட்டும் பிளாஸ்டிக் குவளையில் ஊற்றப்பட்டு கைமாறப்படுகின்றது.

பால், சீனி, தேயிலை எல்லாமே உயர்த்தப்பட்டவனுக்கும், தாழ்த்தப்பட்டவனுக்கும் சமமாக இருக்கின்ற போதும் குடிக்கும் குவளையில் உதடு பதிவதால் மட்டுமே அது தீட்டாகிப் போனது.

இரட்டைக் குவளைக் கலாச்சாரத்தில் பிறந்து வளர்ந்தவர்களெல்லாம் பாக்கியவான்கள்

நிச்சயம் நீங்கள் பாக்கியவான்கள்.
காரணம் எங்கள் மூதாதைக்கு குடிக்கத் தண்ணீர் கொடுக்கப்பட்டதெல்லாம்
சிரட்டையிலே....

வாரம் - 4
கஜூ ;அந்தப் பூனையைத்தான் அவள் வளர்த்தாள். அந்தப் பூனையை விட அவளைத்தான் எனக்கு அதிகம் பிடித்திருந்தது.

வெள்ளை வயிற்றுடனும், வரி வரியாய் இருக்கும் கறுப்பு முதுகுடனும், இடமும் வலமுமாய் சுர்... சுர்... என்று விசுக்கும் அதன் நீள வாலுடனும் எப்போதும் அவளுடனே அது ஓடித் திரிந்தது.

தனது கோலிக்குண்டுக் கண்களால் அவளையே பார்த்துக் கொண்டிருக்கும் கஜூ, தொலைபேசி வால்பேப்பரில் அவள் முகத்தில் இருக்கும் குட்டி மூக்கினை தனது மூக்கால் உரசிக் கொண்டேயிருக்கும். அவளது சப்பாத்துக்களை நாவினால் தடவி எச்சில் படுத்தும். பின் வலப்பக்கமாய் திரும்பி குப்புறப்படுத்துவிடும். 

அவளைப் போலவே அதுவும் அதிகமாக பேசுவதில்லை. மியாவ்...மியாவ்...மியாவ்... மியாவ்... என்றால் மியா... என்பதோட தூங்கி விடும். நாய்களின் எதிரியாக இருக்கும் பூனைகளுக்கிடையில் இது மட்டும் நாய்களின் முகங்களையே முகர்ந்து நிற்கும்.

2020.03.20 - நேற்று அந்தப் பூனை இறந்து விட்டது. அவளால் அதனை ஜீரணித்துக்கொள்ள முடியாதென்பதை நான் நன்கு அறிவேன்.

அந்தப் பூனையிடம் விளையாடுகிற சொற்ப நேரத்திலாவது அவள் என்னுடன் பேசட்டும்.

நான் வாலின்றிய கஜூவாகிறேன் அவளுக்காக....

துரும்பர், முக்குவர், திமிலர், பறையர், பள்ளர், அம்பட்டர், தட்டார், சண்டார், வேளாளர், கடையர், பார்ப்பனர், கயிறுக்காரச் சான்றார், யானைக்காரச் சான்றார், தச்சர், வண்ணார், நளவர், கரையார்,கோவியர், அருந்ததியர், சிவியர், பரவர், கன்னார்,கம்மாளர், கைக்கோளார், சக்கிலியர்...

தமிழனின் பெருங்கண்டுபிடிப்பாகிய இத்தனைக்குள்ளும் புதிதாக வருபவன் எந்த சாதியென்று கண்டுபிடிக்கும் உத்தியைத்தான் உலகம் நிகழ்த்திக் கொண்டேயிருக்கிறது.தமிழன் என்று சொல்கின்றவன் நிகழ்த்திக் கொண்டேயிருக்கின்றான்.

வாரம் -5
கட்டுரையா? கதையா? நூல் விமர்சனமா? அனுபவப் பகிர்வா ?

என்னடா இது என்று நீங்கள் குழம்பியபடி வாசிக்கும் பதிவை எழுதிக் கொண்டிருக்கும் எனது பெயர் பாக்கியராசா மிதுர்ஷன். இந்தப் பெயரில் எழுதுவதென்பது எனக்குப் பிடித்ததில்லை. எழுதுவதென்றாகி விட்ட பின்னர் எனக்கான ஒரு பெயரை சிருஷ்டிப்பதென்ற நோக்கம் என்னிடத்தில் எழுந்து கொண்டேயிருந்தது.

ரெங்கராஜன் என்ற பெயர் சுஜாதா ஆனது போல, ஜெயகாந்தன் என்பது ஜேகே என்றானது போல எனக்கும் ஒரு பெயர் தேவைப்பட்டது. இலக்கிய உலகில் எனக்கான முகத்தை காட்டுவதற்கான பெயர், அந்தப் பெயருக்காக நான் அதிகம் கஸ்டப்படவுமில்லை.

இந்திரா தேவி என்கிற என் அம்மாவின் பெயரின் முதற்பகுதியை அம்மாவிடம் இருந்து கடன் வாங்கிக் கொண்டேன். எனது நிலத்தை, எனது மண்ணை , நான் பிறந்தது, தவழ்ந்து, வளர்ந்த பெரியநீலாவணைக் கிராமத்தை எனக்கான அடைமொழியாக்கினேன்.

அதிலிருந்து தான் நீலாவணை இந்திரா பிறந்தான். மிதுர்ஷன் மரித்துவிட்டான்.

சடையன் குளம் என்ற நாவலில் எழுத்தாளர் ஸ்ரீதர கணேசன் பச்சேரி என்ற கிராமத்தை முன்னிறுத்தி குறிப்பிடும் கதையிலும், எழுத்தாளரும் நடிகருமான வேலராமமூர்த்தி தனது குற்றப்பரம்பரை எனும் நாவலில் பெரும்பச்சேரி எனும் கிராமத்தை முன்னிறுத்தி எழுதுவதிலும் ஒரே விதமான சாதியை முன்னிறுத்திய கதையொன்றே அரங்கேறுகின்றது.

ஊரின் பொதுக்கிணற்றில் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த பெண்ணொருத்தி நீரெடுப்பதும். பொதுக்கிணறு பொதுவானது என்கிற கருத்து வருகையில், அடுத்த நாளே கிணற்றில் மலம் கிடப்பதும் என்கிற கதையே அது. வலிமிக்க உணர்வாகும்.

மலத்தை விட இன்னொரு மனிதன் குடிப்பதற்கு நீரெடுப்பது இவர்களுக்கு தீட்டாகிறது. 

வாரம் -6
காவலர்களால் பிடிக்கப்பட்ட வித்யுத்ஜீவன் அசுரர்களின் ராஜசபையில் விலங்குகளோடு நிற்கிறான். அவன் முகத்தில் அச்சமில்லை.

' ஏ... வித்யுத்ஜீவா.............

என்னே தைரியம் உனக்கு, வங்கம் சூழ் லங்காபுரியின் அசுரப்பேரிராச்சியத்தின் சபையிலே கைதியாய் நிற்கின்றவனே......

கள்வன் போல் கோட்டைக்குள் நுழைந்ததற்கு தண்டனை என்ன தெரியுமா ?
உன் தலை சீவப்படும்....
குள்ள நரியினைப்போல் யாரை ஏய்க்க இங்கு வந்தாய்!
சொல்லடா! என்னே உந்தன் இறுமாப்பு...
பின்னணிக் குரல் - சூர்ப்பனகையுடயது. 

ஐயோ... நான் வித்யுத்ஜீவனை காதலிப்பது மட்டும் என் தமயனுக்கு தெரிந்தால்..... என்னவாகுமோ... ஈஸ்வரா...
ஆதியும் அந்தமுமில்லா இறைவனே...
பரமேஸ்வரனே....
அசுரர் குலத்தின் ஆதார சுருதியே....
என் காதலனை காப்பாற்றுவாய் ஈசனே....
வித்யுத்ஜீவன் - லங்காபுரியின் அரசன் சீ... நீ... லங்காபுரியின் அரசனா...

நான் லங்காபுரியின் அரசன் நான். சூர்ப்பனகையின் காதலன் நான். மைத்தகுமேனியன், தசபத்துடையான், கரமிருபதுடையான் என்கிற ராவணனான உன்னை வதம் செய்ய வந்த வீரன் நான். 
என்னையா .. யாரென்று கேட்கிறாய்... மூடப்பதரே... தூ....

இப்படியான மேடை நாடகக்கூத்துக்களில் கழிந்தது தான் எங்கள் பால்யம்.

கீழ் ஜாதி...
நீ யாரையெல்லாம் 

கீழ் ஜாதி என்றாயோ

நீயும் கீழ் ஜாதி தான் மறந்து விடாதே...

தினம் தினம் வெறுங்கையில்

மலவாசல் கழுவுகிற நீதான் 

கையுறையுடன் கழிவுகள் அள்ளுபவனை

கீழ் ஜாதி என்றாய்

இப்போது சொல் நீயும் கீழ் ஜாதி தானே...

வியர்வை நெய் தோய்ந்து 

நெடி தாங்கா கக்கத்தில் பூப்பென்பில்

மயிர்களை மழிக்கின்ற நீதான் 

உன் முகச் சவரம் செய்பவனை

கீழ் ஜாதி என்றாய்

இப்போது சொல் நீயும் கீழ் ஜாதி தானே...

அழுக்காய் போன உன் உள்ளாடை

துவைக்கும் நீதான் 

உன் மேலாடை வெளுப்பவனை

கீழ் ஜாதி என்றாய்

இப்போது சொல் நீயும் கீழ் ஜாதி தானே...

ஆ உரித்து தின்று அதன் 

குருதியான கன்றின் 

பால் திருடி குடித்த நீதான் 

அதன் தோலில் இசை நெய்தவனை

கீழ் ஜாதி என்றாய் 

இப்போது சொல் நீயும் கீழ் ஜாதி தானே...

சிறுவயதிலே 

செருப்பின்றி சகதி மிதித்து 

அறுந்த செருப்பிற்கு புதுச் செருப்பு வாங்க வக்கில்லாத நீதான்

உன் செருப்பை தைத்தவனை 

கீழ் ஜாதி என்றாய் 

இப்போது சொல் நீயும் கீழ் ஜாதி தானே...

அந்நிய புட்டிகளுக்குள் 

புதைந்து போன நீதான்

கருப்பட்டிக்கும் கள்ளிற்கும் 

பதநீர் இறக்கியவனை கீழ் ஜாதி என்றாய்

இப்போது சொல் நீயும் கீழ் ஜாதி தானே...

முதுகெலும்பற்று நூறு பவுன்

சீதனம் கேட்ட நீதான்

அந்த நூறு பவுன் பொன்னை உருக்கி நகை செய்தவனை

கீழ் ஜாதி என்றாய்

இப்போது சொல் நீயும் கீழ் ஜாதி தானே...

இத்தனையும் ஆடி 

நீ மரித்துப்போன பின் 

உறவுகள் தூக்கி எறிந்த உன் உடலை

உறவாய் இறுதியில் தகனம் செய்தானே

அவனையும் நீ கீழ் ஜாதி என்றாய் 

இன்னும் எத்தனை சொல்ல

இவர்களை இன்னும் நீ கீழ் ஜாதி என்றால் 

இவர்களை விட ஒரு படி கீழே

நீ கீழ் ஜாதி

தாழ்ந்தவன் என்று யாருமில்லை 

தாழ்த்தப்பட்டவன் குரல் ஓங்கவில்லை

ஓங்கும் ஓங்கும் ஒரு நாள் ஓங்கும்

ஓங்கும் பொழுதில் நீங்கள் 

ஏங்கிப் போவீர்கள்.

நீ யாரையெல்லாம் கீழ் ஜாதி என்றாயோ 

நீயும் கீழ் ஜாதி தான் மறந்து விடாதே....

வாரம் - 7

எனக்கு நிறையவே இஸ்லாமிய நண்பர்கள் இருக்கிறார்கள்.

அவர்கள் அல்லாஹ் வை அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் என்கிறார்கள். குர்ஆன் னை புனித நூலாக ஏற்கிறார்கள், ஐந்து வேளை தொழுகிறார்கள், நோன்பிருக்கிறார்கள், எல்லோர் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக என்கிறார்கள், அல்ஹம்துலில்லாஹ்

என்கிறார்கள், இறைவனின் நாட்டமிருந்தால் - இன்ஷா அல்லாஹ் என்கிற வார்த்தையை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இதிலெல்லாம் எனக்கு இஸ்லாமியர்கள் தெரிகின்றார்கள்.

என்னவா நீ வெளிய நிக்கா, உள்ள வாடா, வுது செய்து முகத்தை கழுவிற்று பள்ளிக்க வாவா... என்று என்னையும் அழைக்கையில் தான் அல்லாஹ் எல்லோருக்கும் பொதுவானவர் என்கிற 

உணர்வை தருகிறார்கள்.

அல்லாஹ் குஹக்பர் என்பதை சொல்ல

அருகதையற்றவர்கள் ஆயுதம் தூக்குவோர்.... 

புளியங்குளத்துக்காரனை மறந்து விட்டேன் பார்த்தீர்களா!

சாதியையும், தீண்டாமையையும் களைய வேண்டும் என்கிற நோக்கோடு வந்த அவனது படைப்பை பற்றிய உள்ளக்கிளர்த்தலில் நான் சாதிய இருளைப்பற்றி அதிகம் பேசி விட்டேன்.

எவ்வளவுதான் பேசினாலும் சாதியும் சாதிக்குள் இருக்கிற வன்மமும். கொஞ்சம் கூட குறைந்த பாடில்லை.

சாதிய எதிர்ப்பில் பெரியாரின் வாசகங்களை தூக்கிப்பிடிக்கின்ற பலர் அம்பேத்காரின் வசனங்களை பேசுவதில்லையே ஏன்? 

காரணம்- சாதிய மறுப்பில் வெளிப்படும் சாதியே!

வாரம் - 8

2017. 12. 28 

நேரம் - இரவு 1.30 மணி

அவன் இரண்டாவது முறையாகத் தோற்றியிருந்த உயர்தரப் பரீட்சைக்கான பெறுபேறுகளின் வரவிற்காக தொலைபேசியை அழுத்தியிருக்கிறான்.

போன தடவை 2B மற்றும் C எடுத்திருந்தவன். இந்தத் தடவை எப்படியும் வைத்தியராகி விடுவோம் என்கிற கனவில் காத்திருக்கிறான். 

வைத்தியராவதை குறித்து அவன் விரும்பியதில்லை, பொறியியலில் படிப்பதே அவன் சிறுவயது முதல் உள்ளக்கிடங்கில் ஓடிய கனவாக இருந்தது. இருந்தாலும் தகப்பனின் ஆசைக்காக விஞ்ஞானப் பிரிவில் படித்துக் கரையேறியிருந்தவனுக்கு பரீட்சை பெறுபேறு பெருத்த அதிர்ச்சியையே அள்ளிக் கொடுத்தது.

2A மற்றும் B எடுத்திருந்தான். ஆஹா சந்தோஷம் தானே என்றால் மாவட்ட வெட்டுப்புள்ளியில் 47 வைத்தியர்கள், இவனது நிலை 50. 

நீயா நானா கோபிநாத் நீட் தேர்வை குறித்து கேட்ட கேள்வியே அவன் ஆழ் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

எப்பதான் சேர், இந்த மார்க்ஸ் பத்தும்???????????????????????

தனக்குக் கீழே ஒருவன் இருக்கின்றான் என்கிற ருசியை சாதி ஏற்படுத்துகின்றது.

சாதி என்பது அதிகாரம் நீலம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களுடைய நிறம் என்பது தவறான கற்பிதம் புரிந்து கொள்ளுங்கள்,பிரியம் கொள்ளுங்கள், மன்னித்துக் கொள்ளுங்கள்,கூச்சமில்லை எனில் ஒரு முறை முத்தமிடுங்கள் இவ் அத்தனை கூற்றுக்கும் சொந்தக்காரன். இந்தப் புளியங்குளத்துக்காரன்.

வாரம் - 9

நான் இதுரை நேரில் எந்தவொரு பாவைக்கூத்தையும் பார்த்தது கிடையாது.
இந்தியன் படத்திலும், தசாவதாரம் ' முகுந்தா... முகுந்தா... பாடலில் ' என நான் பாவைக்கூத்து பார்த்ததெல்லாம் சினிமாவில் தான்.

தீட்டும், தீண்டாமையும், சாதியும் எப்போதும் மனிசப்பயலுக மத்தியில் பகைமையத்தான் விதைச்சி வைக்குது. அரசியலில் சாதியும், ஆன்மீகத்துல சாதியும், பொண்ணு குடுத்து பொண்ணு எடுக்கிறதுல சாதியும், ஊர் எல்லையில் சாதியும், படிக்குறதுல சாதியும், படி அளக்குறதுல கூட சாதியும், தனக்கு தேவையான நேரத்துல தலையை விரிச்சுப் போட்டு தொங்கு... தொங்கு... தங்கு... தங்குனு பேயாட்டம் ஆடிப்போகுது. தமிழர்கள் தமிழ் தெரியாத ஒரு தலைமுறையை அடைந்த விட்ட நிலையிலும், சாதி தெரியாத தலைமுறையாகவில்லை.

இப்பயெல்லாம் யாரு சாமி சாதி பாக்குறாக.... என்ற பொத்தாம் பொதுவான கேள்வி, சனங்களின் வாயில் விழுந்தாலும்.....

தம்பி எவடம், எந்த ஊரப்பு, எந்த ரோட்டு, எந்த ஒழுங்கை, அவாவின்ர சொந்தமோ, இவாவின்ர சிநேகமோ, என்ன சாமி அப்பன் கும்பிடுற நீங்கள்.....?

என்று வரிசையாக அடுக்கப்படும் கேள்விகள், நேரடியாக மூக்கைத் தொடாமல் தலையைச்சுற்றி மூக்கைத் தொடுவதாய், பிறந்த சாதியறிகிற கூட்டம் இன்னும் இங்கே குறைவில்லாமலே இருக்குது.

வாரம் - 10

கருணைக் கொலை - மூக்கையா தாத்தா.

இந்த இரண்டுக்குமான தொடர்பை கற்பிக்கும் அனுபவப் பகிர்வு எனக்குள் நிம்மதியான மரணத்தை மட்டும் தான் கிளப்பி விட்டுப்போகிறது.

இதைப்படைத்த படைப்பாளி இதோடு மரிக்கிறான். அடுத்த பாகத்தோடு விரைவில் உயிர்த்தெழுவான்.

ஒரு நீலாவணையான் புளியங்குளத்துக்காரனை பற்றி எழுதியிருக்கிறான். அந்தப் புளியங்குளத்துக்காரன் வேறு யாருமல்ல. பரியேறும் பெருமாள் புகழ் இயக்குனர் திரு. மாரி செல்வராஜ் அவர்களே ... அவருடைய மறக்கவே நினைக்கிறேன் , ஆனந்த விகடனில் வெளியாகிய முதல் பத்து தொடர்கள் எனக்குள் கிளர்த்திவிட்டுப் போன சங்கதிகளையே பதிவு செய்துள்ளேன்.

தொடர்ச்சியாக அடுத்தடுத்த வாரங்களில் வந்த கதை போன்ற கட்டுரைகள் தொடர்பிலும் எழுதுவேன் என்ற நம்பிக்கையுடன்......

அன்புடன் இந்திரா.
இப்படைப்பு தொடர்பான உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...
தொடர்புகளுக்கு - mithanrajh@gmail.com
முகவரி - 11, மத்திய வீதி, பெரியநீலாவணை - 02 , கல்முனை, இலங்கை.

0/Post a Comment/Comments

Previous Post Next Post