கிரிக்கெட் போட்டியை நிறுத்துவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தது; அர்ஜுன ரணதுங்க!!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள ரோயல், புனித தோமஸ் கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியை நிறுத்துவதற்கான அதிகாரம் தற்போதைய நிலையில் ஜனாதிபதிக்கே காணப்பட்டதாக முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கூறியுள்ளார்.

மார்ச் 17ம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய ஜனாதிபதி,

கடந்த வார இறுதியில் கொழும்பு ரோயல் – புனித தோமஸ் கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியை நிறுத்துமாறு தான் பணித்ததாகவும், எனினும் அமைப்பாளர்கள் தனது கோரிக்கையை புறக்கணித்ததாகவும், கூறினார்.

ஏனைய போட்டிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன, “அரசுக்கு அவசியம் ஏற்பட்டிருக்குமாயின், இந்த போட்டியையும் நிறுத்தியிருக்க முடியும்” என முன்னாள் அமைச்சர் அர்ஜுன குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு பார்வையாளர்களின் சுகாதார நலனை கருத்தில் கொண்டும், பாடசாலை மட்ட கிரிக்கெட் போட்டிகளை இடைநிறுத்துமாறு தான் அழைப்பு விடுத்ததாகவும், எனினும் இதனை ஏற்பாட்டாளர்கள் கவனத்தில் எடுக்கவில்லை எனவும் ஜனாதிபதி கூறியிருந்தார்.


எவ்வாறெனினும் ரோயல் – தோமஸ் போட்டியில் பங்கேற்ற ஒருவருக்கு கொரோனா தோற்று ஏற்பட்டமை பின்னர் தெரியவந்தது.

இந்த போட்டியில் பங்கேற்ற மேலும் பலருக்கும் நோய் தோற்று ஏற்பட்டிருக்கலாம் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்திருந்தனர்.

சமீபத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க, சுமார் 30 – 40 பேருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனவும், அவர்களை சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சராக இருந்த ஹர்ஷ டி சில்வா, இந்த போட்டியை காண வந்தவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post