நாடு முழுவதும் ஊரடங்கு; மக்கள் பூரண ஆதரவு!

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக நாடுமுழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்குச் சட்டம் நேற்று மாலை 6 மணிக்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.

இந்நிலையில் குறித்த ஊரடங்கு உத்தரவுக்கு அமைய நாடு முழுவதும் மக்கள் நடமாட்டம் முடக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் பூரண ஆதரவை வழங்கி வருகின்றனர்.

அந்தவகையில், பொலிஸ் ஊரடங்குச் சட்டத்திற்கு கிளிநொச்சி மக்கள் பூரண ஆதரவினை வழங்கியுள்ளனர். கிளிநொச்சி நகரில் மக்கள் நடமாட்டம் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வைத்தியசாலை தவிர்ந்த ஏனைய செயற்பாடுகள் இடம்பெறவில்லை.

அதேவேளை, ஆங்காங்கே பொலிஸார் குவிக்கப்பட்டு சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அவ்வப்போது பயணிக்கும் வாகனங்கள், பயணிகள் பொலிஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன் நடமாட்டத்தை குறைப்பதற்கான அறிவுறுத்தல்களும் பொலிஸாரால் வழங்கப்படுகின்றது.
இதேவேளை, மன்னார் மாவட்ட மக்கள் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்திற்கு நேற்று மாலை 6 மணி முதல் தற்போது வரை பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர்.

இன்றைய தினம் காலை முதல் மன்னார் மாவட்டம் மக்கள் நடமாட்டம் இன்றி அமைதியான முறையில் காணப்படுவதுடன் பொலிஸார், இராணுவம் மற்றும் கடற்படையினர் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அவசர தேவைகளுக்காக ஒரு சில இடங்களில் தனித்தனியே மக்களின் நடமாட்டம் இடம்பெறுகின்றது. எனினும் மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த பொலிஸார் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக வைத்திய சேவை உட்பட அவசியத் தேவைகளுக்குச் செல்கின்றபோது பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர்.

அத்துடன், வவுனியாவில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் முழுமையாக இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

வவுனியா மாவட்டம் தழுவிய ரீதியில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அத்தியவசியத் தேவைகள் நிமித்தம் வெளியில் பயணிப்போரைத் தவிர ஏனையவர்கள் பொலிஸாரால் திருப்பியனுப்பப்பட்டு வருகின்றனர்.

இதேவளை, வவுனியா பொலிஸாரால் 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் 6 பேர் போக்குவரத்து விதி மீறல் குற்றங்களுக்காகவும் இருவர் அவசியமின்றி வீதிகளில் சென்றமைக்காகவும் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் சிலர் விடுவிக்கப்பட்டனர்.

இதேவேளை, ஆதரவற்ற யாசகர்கள் வீதிகளில் தஞ்சமடைந்துள்ளதுடன் உணவின்றித் தவித்துவரும் நிலை ஏற்பட்டுள்ளது. வவுனியாவில் வேலைநிமித்தம் வருகைதந்த சிலர் தமது சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு போக்குவரத்து வசதிகள் இன்றி வீதிகளில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலையும் காணப்பட்டது. அவர்களுக்கு வீதிளில் நடமாடுவதற்கான தற்காலிக அனுமதிப்பத்திரம் பொலிஸாரால் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கின்ற நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சுழற்சி முறை போராட்டக் கூடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வடக்கு கிழக்கு தாயகத்தில் கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடியறியும் சங்கத்தினால் வவுனியா தபால் திணைக்களத்திற்கு அருகில் அமைக்கப்பட்ட கொட்டகையில் 1,127ஆவது நாளாக சுழற்சி முறை உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும், அம்பாறை மாவட்டத்தில் ஊடரங்குச் சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் பொதுமக்கள் வீதிகளில் தேவையில்லாமல் ஒன்றுசேர்வதைக் கட்டுப்படுத்த முப்படையினரும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்துடன், பாதுகாப்புத் தரப்பினரின் வேண்டுகோளுக்கு இணங்க கல்முனை, கல்முனை குடி, நற்பிட்டிமுனை, சேனைக் குடியிருப்பு, மருதமுனை, சாய்ந்தமருது, பாண்டிருப்பு, பெரிய நீலாவணை போன்ற மத வழிபாட்டுத் தலங்களில் கொரோனா விழிப்புணர்வுச் செயற்றிட்டம் ஒலிபெருக்கி வாயிலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், வீடுவீடாக, கிராம சேவகர்களின் உதவியுடன் பொலிஸார் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தந்தவர்களின் விபரங்களைச் சேகரித்து வருகின்றனர்.

மேலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கை முழுவதும் அனுஸ்டிக்கப்படும் ஊரடங்குச் சட்டம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டமும் முழுமையாக ஸ்தம்பித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வைத்தியசாலைகள் தவிர்ந்த அனைத்துப் பிரிவுகளும் முடங்கியுள்ளதுடன் மக்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். மேலும் பொலிஸார், இராணுவத்தினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டுவருவதுடன் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்க மட்டக்களப்பு மக்கள் பூரண ஆதரவினை வழங்கி வருகின்றனர்.


Previous Post Next Post