கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அவுஸ்ரேலியாவில் முதலாவது மரணம் பதிவு!

அவுஸ்ரேலியாவின் மேற்கு நகரமான பெர்த்தில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் உள்ள டயமண்ட் பிரின்செஸ் பயணக் கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட 78 வயதுடைய குறித்த முதியவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

"அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள், துரதிர்ஷ்டவசமாக அவுஸ்ரேலியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் நாங்கள் சந்தித்த முதல் மரணம் இது" என மேற்கு அவுஸ்ரேலியா மாநிலத்தின் தலைமை சுகாதார அதிகாரி றொபேர்ட்சன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அவருடைய மனைவியும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர் என்றும் அவர் தற்போது சற்று குணமாகி வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அவுஸ்ரேலியாவில் இதுவரை 25 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை வைரஸ் தாக்கம் மத்திய கிழக்கிலும் அதிகரித்துள்ள நிலையில் ஈரானில் இருந்து நாட்டுக்கு நுழையும் அனைத்து வெளிநாட்டினருக்கும் நுழைவதற்கு தடை விதித்துள்ளதாகவும் அவுஸ்ரேலியா அரசாங்கம் கூறியுள்ளது.

தற்போது உலகளவில் 85,000 க்கும் மேற்பட்டவர்கள் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இதில் சீனாவிலேயே அதிகளவானவர்கள் பதிவாகியுள்ளதாகவும் சீனாவுக்கு வெளியே இது 53 நாடுகளுக்கு பரவியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous Post Next Post