யாரும் அச்சமடைய தேவையில்லை! யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் கோரிக்கை!!

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் ஒருவர் கூட கொரோனா தொற்றுக்குள்ளானவர் என அடையாளப்படுத்தப்படவில்லை.

யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி இதனை தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் பேசிய அவர்,

யாழ். போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்று நோய்க்கான சந்தேகத்தின் அடிப்படையில் ஐந்து பேர் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில், சுவிஸில் இருந்து வருகை தந்த போதகருடன் உரையாடிய நபர் மீதான பரிசோதனை அறிக்கைகள் நாளை ஊடகங்களில் வெளியிடப்படும்.

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் உள்ள பிலதெல்பிய தேவாலயத்திற்கு வருகை தந்த போதகர் யாழ்ப்பாணத்தில் இருந்து சுவிஸ் நாட்டிற்குச் சென்ற பின்னர், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.


அதனடிப்படையில் இன்றையதினம் யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, யாழ்.மாநகர முதல்வர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், இராணுவத்தினர், சுகாதார சேவைகள் அதிகாரிகள், யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர் உள்ளிட்ட பல தரப்பினரும், போதகர் வருகை தந்து தங்கியிருந்த வீட்டில் இருந்தவர்கள் மற்றும் அன்றைய போதனைக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகத்தில் அவர்கள் தொடர்பான விபரங்களையும் திரட்டினார்கள்.

அந்தவகையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த நபர் உட்பட ஏனைய நால்வரும் சுகதேகிகளாக உள்ளனர்.

ஒருவருக்கு மாத்திரம், பரிசோதனை செய்யப்பட்டுள்ளதுடன், அவர் தொடர்பான பரிசோதனை அறிக்கை நாளை தெரிவிக்கப்படும்.

போதகரை சந்தித்த நபருக்கு காய்ச்சல் மற்றும் இருமல் இருப்பதனால், சந்தேகத்தின் பேரில் விடுதியில் அனுமதித்து சிகிச்சை அளிப்பதாகவும், இந்த 5 பேரின் உடல் நிலையைப் பொறுத்தவரையில் ஆரோக்கியத்துடன், திடமாக இருப்பதாகவும், பொரும்பாலானவர்களை நாளை, வீடுகளிற்குச் செல்ல அனுமதியளிக்க முடியும் என்றார்.

அரியாலை பிலதெல்பிய தேவாலய சம்பவம் தொடர்பாக, சந்தேகத்திற்கு இடமாக ஒருவர் வருகின்ற போது, அவருக்கான பரிசோதனைகள் செய்வது அவசியம்.

உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களின் படி, சந்தேகம் என்ற அடிப்படையில் வருபவர்களுக்கான சிகிச்சைகள் வழங்க யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் தயாராக இருக்கின்றார்கள்.

அரியாலை ஒன்று கூடலில் கூடியவர்களில் பெரும்பாலானவர்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்புக் குறைவு. சில பேருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்படக்கூடும்.

அவ்வாறு வருபவர்களுக்கு உரிய சிகிச்சைகளும், பரிசோதனைகளும் செய்யப்படும்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் ஒருவர் கூட கொரோனா தொற்றுக்குள்ளானவர் என அடையாளப்படுத்தப்படவில்லை.

அந்தவகையில், பொது மக்கள் அதிகளவு பதற்றம் கொள்ளத் தேவையில்லை. இப்போது, 177 நாடுகளில் கொரோனா பரவியுள்ளது. எனவே, எமது பகுதியிலும் கொரோனா தொற்று ஏற்படுவதற்கான அபாய நிலைகள் காணப்படுகின்றன.

அல்லது இந்தப் பகுதியில் ஒரு சில தொற்றுக்குள்ளானவர்கள் இருக்கலாம் அவ்வாறு இருந்தாலும், அவரை திடீரென அடையாளப்படுத்துவதும் கடினம்.

தொற்று ஏற்பட்டால், குணப்படுத்துவதற்கு போதிய வசதிகள் உள்ளன. பொதுமக்கள் அனைவரும் மிகவும் கவனமாக நடந்துகொள்ள வேண்டும்.

பதற்றங்களை ஏற்படுத்தாது, அரசாங்கத்தின் ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு கேட்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறு செய்வதன் மூலம், ஓரிருவருக்கு தொற்று இருந்தாலும், அந்த தொற்று இல்லாமல் அழிக்கப்படும்.

யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி, ஏனைய பகுதிகளில் உள்ளவர்களுக்கும், உலகத்தில் உள்ளவர்களுக்கும் செய்ய வேண்டிய கடமையாகும்.

தொற்றுக்குள்ளானவர்களை தனிமைப்படுத்தி, தொற்றைத் தடுப்பதே மிக முக்கியமான கடமை. எனவே, யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் பெருமளவில் பதற்றம் அடைய தேவையில்லை.

பாதுகாப்பாகவும், அவதானமாகவும், சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய பொது மக்கள் அவதானமாக நடந்துகொள்ள வேண்டுமென்றும் யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
Previous Post Next Post