இந்தியாவில் நாளை ஊரடங்கு அமுலாகிறது: தமிழகத்தின் பல எல்லைகள் மூடல்!

இந்தியாவில் பிரதமர் மோடி அறிவித்துள்ள ஊரடங்கை முழுமையாகக் கடைப்பிடிக்க அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ள நிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களுக்கான அத்தியவசியத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் நடவடிக்கைகள் இன்று இடம்பெறுகின்றன.

இதேவேளை, தமிழ்நாட்டில் நாளை இரவு 9 மணி வரை மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் போக்குவரத்துச் சேவைகள் முடக்கப்படுகின்றன.

மேலும், தமிழகத்திற்கு பிற மாநிலங்களில் இருந்து வாகனங்கள் வருவதற்குத் தமிழக அரசு தடை விதித்துள்ளது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய அண்டை மாநிலங்களின் எல்லைகளும் மூடப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் நாளை விடுதிகள் மூடப்படுவதோடு, அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்படுவதாக வணிகர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை நேற்று மாலை நிலைவரப்படி 223 என மத்திய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதில் 191 இந்தியர்களும் 32 வெளிநாட்டவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தியாவில் 4 உயிரிழப்புக்களும் நிகழ்ந்துள்ளன.
Previous Post Next Post