தமிழ்த்தேசியத்திற்கு உரம் ஊட்டியவர் பாண்டியூர் வேல்முருகு மாஸ்டர்;அவரின் இறுதி ஊர்வலத்தை நினைத்துப்பார்க்கிறேன்!!

செ.துஜியந்தன்
அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு கிராமத்தைச்சேர்ந்தவர் அமரர் வேல்முருகு மாஸ்டர். இவரின் 32 ஆவது நினைவு தினம் இன்று 2020-03-20 நினைவு கூரப்படுகின்றது. வெள்ளைவேட்டி, முகத்தில் தாடி, சிரித்தமுகம், எந்நேரமும் மக்கள் பணியாற்றுவதில் தேனிபோன்று சுறுசுறுப்பாக இயங்குபவர் வேல்முருகு மாஸ்டர் இவர். தமிழ் மீதும், தமிழ் மக்கள் மீதும் தீராத பற்றுக்கொண்டவர். 

ஆசிரியராக இருந்து பலரை உருவாக்கியவர் மடடுமல்ல அரசியலிலும் பலரை உருவாக்கியவர். அரசியல் என்றால் அப்படியொரு தூய்மையான அரசியலை செய்தவர்.

தந்தை செல்வா மீது பற்றுக்கொண்டவர் அவரின் அரசியல் அடிச்சுவடியைப்பற்றிக்கொண்டு எம் தமிழ் மக்களின் விடுதலைப்போராட்ட பயணத்திற்கு தான் மரணிக்கும் வரை உறுதுணையாக இருந்தவர். கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் கொண்டவர் வேல்முருகு மாஸ்டர். தமிழ் மக்களின் உரிமைக்காக வடக்கு கிழக்கு தெற்கு எங்கும் ஓயாமல் குரல்கொடுத்தவர். உண்மை, நேர்மை, உழைப்பு, சத்தியத்திற்கு கட்டுப்பட்டு வாழந்தவர். இவரைப்போல ஒரு நேர்மையான அரசியல்வாதியை இந்தக்காலத்தில் காணமுடியாது.

அம்பாறை மாவட்டத்தமிழ் மக்கள் எதிர்நோக்கிய அரசியல், சமூக, பொருளாதார கல்வி, ரீதியிலான பிரச்சினைகளை அன்று வெளி உலகிற்கு கொண்டுவந்தவர். அம்பாறை மாவட்டத்திலும் கணிசமான தமிழ் மக்கள் வசிக்கின்றார்கள். அவர்கள் தங்களது இருப்புக்காக தினம் தினம் போராடிக்கொண்டிருக்கின்றார்கள். என்பதை உரலுக்கு ஒரு பக்கம் தான் இடி ஆனால் அம்பாறை தமிழர்களுக்கோ இரண்டு பக்கமும் இடி என்பதை அஞ்சாமல் எடுத்துரைத்த தலைவர் எங்கள் வேல்முருகு மாஸ்டர் என்றால் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

ஒரு காலத்தில் தமிழ்த்தேசிய ஜனநாயகப்போராட்டம் உச்சக்கட்டத்தில் இருந்தபோது அனைத்து தலைவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர் வேல்முருகு மாஸ்டர். கிழக்கில் அன்றைய தமிழர்விடுதலைக்கூட்டணிக்கு ஒரு முகவரியை பெற்றுக்கொடுத்தவர். அதிலும் அம்பாறை மாவட்டத்தமிழ் மக்கள் மத்தியில் அன்று தமிழர் விடுதலைக்கூட்டணி, தமிழரசுக்கட்சி ஆகியவற்றை வளர்க்க அரும்பாடுபட்டவர். அவரது பேச்சிலும் செயலிலும் தமிழ்த்தேசியம் கலந்திருக்கும். அதனால் அவரது பிள்ளைகளுக்கு தமிழிலே பெயர்வைத்தவர்.

எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கின்றது. எனக்கு அப்போது பதினொருவயது. 1988 ஆம் ஆண்டு 4மாதம் 16 ஆம் திகதி பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் நாகேந்திரன் எனும் போராளி ஒருவர் உண்ணவிரம் இருந்தார். அதற்கு அருகில்தான் வேல்முருகு மாஸ்டரின் வீடும் இருந்தது. அந்த இளைஞனின் விடுதலை உணர்வுடன் கூடிய உண்ணாவிரதப்போராட்டத்திற்கு தனது பூரண ஆதரவை வழங்கி இருபத்திநான்கு மணி நேரமும் அந்த உண்ணாவிர மேடையில் அவரும் இருந்தார். உண்ணாவிரதம் ஆரம்பித்து ஐந்து நாட்கள் கழித்து நாகேந்திரனின் உடல் நிலை மோசமடைந்திருந்தது. அவர் உயிருக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படலாம் என்ற நிலை இருந்தது. அப்போது தான் அந்தச் துயரச்சம்பவம் நடந்தது.

1988-04-20 ஆம் திகதி வேல்முருகு மாஸ்டர் கடத்தப்பட்டு கல்முனை ஸ்ரீ தரவைக்கோவில் அருகில் சுடப்பட்டு சடலமாக கிடப்பதாக தகவல்வந்ததும். எல்லோர் மனங்களும் துயரத்தில் ஆழ்ந்தது. அந்த உண்ணாவிரதப்போராட்டமும் இடைநடுவில் கைவிடப்பட்டிருந்தது. வேல்முருகு மாஸ்டரின் இறுதி ஊர்வலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. 

வீதி எங்கும் வாழைமரங்கள், தோரணங்கள் கட்டப்படடிருந்தது. இளைஞர்கள் பெரும் எழுச்சியுடன், உணர்ச்சியுடன் திரண்டிருந்தார். நான் வேல்முருகு மாஸ்டரின் இறுதி ஊர்வலத்தில் பகிரப்பட்ட நூற்றுக்கணக்கான நினைவஞ்சலி நோட்டீஸ்களை சேரித்துத் சென்றிருந்தேன். அவற்றில் சிலதை பலகாலம் பத்திரப்படுத்தியும் வைத்திருந்தேன். வேல்முருகு மாஸ்டரின் இறுதி ஊர்வலம் இப்போதும் என் மனக்கண் முன் நிழலாடுகின்றது.

இன்று வேல்முருகு மாஸ்டர் மறைந்து 32 ஆண்டுகள் ஆகின்றது. அவரை எந்தவொரு தமிழ்த்தேசியவாதியும் நினைத்துப்பார்பதுமில்லை, கதைப்பதும் இல்லை. அவர் வளர்த்த கட்சியாளர்களும் நினைப்பதில்லை என்பது வேதனையான விடயம்தான். அம்பாறை மாவட்ட மக்களுக்காக அவர்களது அரசியல், சமூக, பொருளாதார, இருப்புக்காகபாடுபட்ட பெருந்தலைவர் அமரர் வேல்முருகு மாஸ்டரின் சேவைகள் என்றும் காலத்தால் அழியாதவை. அவரைப்போல தூய்மையான, நேர்மையான மக்கள் சேவகனையே இன்று அம்பாறை மாவட்டத்தமிழ் மக்கள் எதிர்பார்த்து நிற்கின்றனர்.
நினைவுகளுடன்
செ.துஜியந்தன்
Previous Post Next Post