தேசிய மக்கள் சக்தியின் துண்டுப் பிரசுரங்கள் மட்டக்களப்பில் விநியோகம்!!

'அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை மீறுகின்றது, உரிமைகளை வென்றெடுக்கப் போராடுவோம்' என்ற தலைப்பிலான துண்டுப் பிரசுரங்களை தேசிய மக்கள் சக்தி விநியோகித்து வருகிறது.

மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் இணைப்பாளர் சுந்தரேசன் தலைமையில் இந்த துண்டுபிரசுர விநியோகம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டக்களப்பு பொதுச் சந்தை சதுக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது. தேசிய மக்கள் இயக்கத்தின் உறப்பினர்கள் கலந்துகொண்டு துண்டுபிரசுரங்களை விநியோகித்தனர்.

வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரத்தில், அதிகரிக்கப்பட்ட பொருட்களின் விலையைக் குறைக்கவும், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளான நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்ககவும், துண்டிக்கப்பட்ட ஓய்வூதிய சம்பளத்தை உடனடியாக வழங்கவும், தோட்டத் தொழிலாளிகளின் சம்பளம் உட்பட சகல சம்பள அதிகரிப்பையும் வாக்குறுதியளித்தவாறு வழங்கவும், தகுதிக்கேற்றவாறு பட்டதாரிகள் உள்ளிட்ட தொழில் இல்லாத அனைவருக்கும் தொழில் வழங்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மக்களின் உரிமை மீது கைவைக்க வேண்டாம் எனவும் மக்களின் சொத்துக்களை சூறையாடிய பிணைமுறி மோசடிக்காரர் உள்ளிட்ட அனைவருக்கும் தண்டனை வழங்கும்படி அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே உரிமைகளை வென்றெடுப்பதற்காக கைகோர்த்து கொள்வோம், ஒன்றாக எழுந்து நின்று போராடுவோம் என வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Previous Post Next Post