ஜனாதிபதி சிறப்பு அதிகாரங்களின் கீழ் தயாரிக்கப்படும் குறுகியகால பாதீடு!!

அரசியலமைப்பு சட்டத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரங்களை பயன்படுத்தி மூன்று மாதங்களுக்கான குறுகிய வரவு செலவு திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையினுடைய நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் நாடு கொரோனா வைரஸ் காரணமாக பாரிய நிதி பின்னடைவினை எதிர்கொண்டுள்ளது. அத்துடன், ஏற்கனவே நடைமுறையில் உள்ள வரவு செலவுத் திட்டம் வரும் ஏப்ரல் மாதத்துடன் நிறைவுக்கு வரவுள்ளது.

இவ்வேளையில் அரசியலமைப்பின் 150வது பிரிவில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரங்களின் அடிப்படையில் குறித்த வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் குறித்த வரவு செலவித்திட்டமானது மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையில் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு ஏதுவாக தயாரிக்கப்பட்டுவருகின்றது என தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக தேசிய வரவு செலவுத்திட்ட திணைக்களம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், குறித்த வரவு செலவுத்திட்டத்தில் ஒவ்வொரு அமைச்சுக்குமாக ஒதுக்கப்படவுள்ள நிதிநிலை குறித்த சாரம் வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் தேசிய நிதி சேவை ஆணைக்குழுவிற்கு, 268.4 பில்லியன் தொடர் செலவீனங்கள் மற்றும் 360.1 பில்லியன் மூலதன செலவீனங்கள் உள்ளடங்கலாக மொத்தம் 628.5 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சுகாதார அமைச்சுக்கு 63.3 பில்லியன் ரூபாயும், முப்படைகளுக்கு 68.2 பில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஏற்கனவே ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கைகளுக்காக கடந்தவாரம் 500 மில்லியன் ரூபாயினை ஒதுக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.Previous Post Next Post