இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆமை, டால்பின்; வனத்துறை விசாரணை!!

கடலூர் கடற்கரை கிராமங்களில் ஆமை மற்றும் டால்பின் என இரண்டு கடல்வாழ் உயிரினங்கள் அடுத்தடுத்து இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

கடலூர் மாவட்ட பகுதி கடற்கரை கிராமங்கள் சுமார் 50 கிலோ மீட்டர் நீளம் பரப்பளவு கொண்டது. ஆண்டுதோறும் டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை ஆமைகள் கடற்கரை பகுதிக்கு முட்டையிட வருவதும் பின்னர் குஞ்சு பொரித்து மீண்டும் கடலுக்கு செல்வதும் வழக்கம். இதனால் சம்பந்தப்பட்ட காலங்களில் ஆமைகள் வருகை கடற்கரை கிராமங்களில் அதிகளவில் இருக்கும் என்பதால் படகுகளில் மீன்பிடிக்கச் செல்வோர் மற்றும் இதர பணிகளில் ஈடுபடுவோர் ஆமைகளின் நலன் காக்க வேண்டும் என வனத்துறையினர் ஏற்கனவே அறிவிப்பு செய்திருந்தனர். இந்நிலையில் பல்வேறு வகைகளில் ஆமைகளின் இறப்பு தொடர்கதையாகி வருகிறது. இதில் டால்பின் வகை மீன்களும் அடங்கும். 

கடலூர் சில்வர் பீச் கடற்கரையில் இன்று சுமார் 45 கிலோ எடை கொண்ட மெகா சைஸ் ஆமை கரையில் இறந்து கிடந்தது. 

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அந்த ஆமையை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பின் புதைத்தனர். ஆமை மீன்பிடி படகில் அடிபட்டு இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் முட்டை இடுவதற்காக கரை ஒதுங்கிய ஆமை என தெரியவந்தது. 

இதுபோன்று அக்கரை கோரி கடற்கரை பகுதியில் சுமார் 250 கிலோ எடை கொண்ட டால்பின் மீன் இறந்து கிடந்தது. அடுத்தடுத்து ஆமை மற்றும் டால்பின் வகை மீன் கடலூர் கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கி கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தொடரும் இது போன்ற கடல் வாழ் உயிரினங்கள் இறப்பு சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Previous Post Next Post