கல்குடாவின் தலைமைத்துவத்தை தக்க வைக்க வேண்டும் – அமீர்அலி!!

நாளை (02) நாடாளுமன்றம் கலைக்கப்படலாம். இனி எமது பிரதேசத்தினை தேர்தல் ஆட்கொள்ளும் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்தார்.

ஓட்டமாவடி தாருல் உலூம் வித்தியாலயத்தில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை வளாகத்தில் (01) இடம்பெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இனிவரும் காலம் புள்ளடி கேட்கும் காலமாக இருக்கும் என்று நினைக்கின்றேன். எதிர்வரும் இரண்டாம் திகதியில் இருந்து நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்று பேசப்படுகின்றது. மிக விரைவில் எமது பிரதேசத்தினை தேர்தல் ஆட்கொள்ளும் என்று நினைக்கின்றேன்.

அந்தவகையில் கல்குடாவின் தலைமைத்துவத்தினை கல்குடாவில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்கின்ற அல்லது கல்குடாவில் இருக்கின்ற முப்பத்தி எட்டாயிரம் வாக்குகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக வாக்குகளை கொண்ட கல்குடாவில் இருந்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை பெற்றுக் கொள்ள வேண்டும் என்கின்ற விடயத்திற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.

நீங்கள் தயாராக இல்லாத போது இந்த பிரதேசத்தில் ஒரு பாடசாலை, ஒரு அதிபர், பள்ளிவாசல் சமூகத்துடன் பேசி இந்த காணியை பெற்றமை, பாடசாலையை கொண்டு வந்தமை இவைகளெல்லாம் நீங்கள் எதிர்பார்த்த நிகழ்வுகள் அல்ல. ஆனால் எங்களுடைய பார்வை, நோக்கு எங்களுக்கு தெரியும். நீங்கள் தரும் புள்ளடியால் நாங்கள் உங்களுக்கு செய்து தர நினைக்கின்றோம்.

இப்படி நூற்றுக் கணக்கான விடயங்களை நாங்கள் செய்து கொண்டே இருக்கின்றோம். இன்னும் உங்கள் பிள்ளைகள் மற்றும் ஏனையவர்களுக்கும் இந்த சேவை கிடைக்க வேண்டும். அவ்வாறெனில் கல்குடாவிலுள்ள ஒட்டுமொத்த வாக்காளர்களும் ஒருமித்த கருத்தோடு செயற்படுவீர்களாக இருந்தால் வெற்றியை உங்களுக்குள் தாங்கிக் கொள்ள முடியும்.

உங்களுடைய பிள்ளை அமைச்சராக இருந்து பேசுகின்ற பொழுது அந்த அந்தஸ்த்து, மதிப்பையும் நீங்கள் பெற்றுக் கொள்ளக் கூடிய பெற்றோர்களாக, ஊராக, தொகுதியாக, மாவட்டமாக இருக்கும் என்று நம்புகின்றேன். எனவே எல்லோருடய ஒத்துழைப்பையும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்றார்.

வித்தியாலயத்தின் அதிபர் எம்.எல்.எம்.பைஸல் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, மட்டக்களப்பு மத்தி பிரதிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.அஜ்மீர் உட்பட கல்வியலாளர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது பாடசாலை மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், ஓட்டமாவடி தாருல் உலூம் வித்தியாலயத்தில் 2018ம், 2019ம் ஆண்டு தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் வெற்றிக் கிண்ணம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், கல்வி கற்பித்த ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.Previous Post Next Post