மக்களின் அச்ச உணர்வைப் போக்கவே சட்டசபைக் கூட்டங்கள் – ஸ்டாலினுக்கு, முதல்வர் பதில்

தமிழக சட்டசபை நடந்தால் தான் மக்களின் அச்ச உணர்வைப் போக்க முடியும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வருவதால் நெருக்கடியான நேரத்தில் மக்களுடன் நிற்க சட்டசபை கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முதல்வரிடம் வலியுறுத்தினர்.

இதற்கு பதில் அளித்த முதலமைச்சர், இங்கே பேசிய எதிர்க்கட்சித்தலைவர் மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் கொரோனா வைரஸ் குறித்த அச்சத்தையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எப்படி மேற்கொள்ள வேண்டும் என்ற விவரங்களையும் இங்கே தெரிவித்திருக்கிறார்கள்.

அரசு நிலைப்பாட்டை இங்கே நான் குறிப்பிட விரும்புகின்றேன். எனது தலைமையிலான மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், இதுவரை 4 முறை கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்தி தினசரி நிலவரங்களை அறிந்து, பல்வேறு உத்தரவுகளை உடனுக்குடன் வழங்கி வருகின்றது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து பல்வேறு துறைகளுக்கு 60 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர், சட்டசபையை ஒத்திவைக்க வேண்டுமென்று கோரினார். சட்டசபை நடைபெற்று கொண்டு இருந்தால் தான் நாட்டினுடைய நிலைமை மக்களுக்கு எடுத்துச் சொல்ல முடியும். அதற்காகத் தான் சட்டசபை கூடுகிறது.

ஆகவே, மக்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளை இங்கே தான் விவாதிக்க முடியும். நீங்கள் கூட என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன என்ற விவரத்தை சொல்லுகின்றீர்கள் என்றால், சட்டசபை நடைபெற்று கொண்டு இருக்கின்ற காரணத்தினால் தான் நீங்கள் இங்கே தெரிவிக்கின்றீர்கள். அதற்குண்டான நடவடிக்கைகள் நாங்கள் எடுக்கின்றோம்.

ஆகவே, மக்கள் பணியாற்றுவதற்காகத் தான் நம்மை தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பி இருக்கின்றார்களே தவிர, நாம் இங்கே கூடியதால் நோய் ஏற்படும் என்ற அச்சம் தேவையில்லை.

சட்டசபை கூட்டம் நடைபெற்று கொண்டு இருந்தால் தான், மக்களுடைய அச்ச உணர்வை போக்க முடியும். இதன்மூலமாக செய்தி வெளியே வரும், அரசாங்கம் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கிறது என்ற செய்தி வெளியே போகும். அதேபோல், மக்களிடத்தில் இருக்கின்ற பிரச்சினைகள் எதிர்க்கட்சி மூலமாக அரசிற்கு கொண்டு வந்து, அரசு அதற்குரிய நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக இருக்கும்' என்றார்.


Previous Post Next Post