முழுமையான அதிகாரம் கிடைத்தது – நாளை நாடாளுமன்றம் கலைக்கப்படலாம்!!

இலங்கை சோஷலிச குடியரசின் 8 ஆவது நாடாளுமன்றத்தின் ஆயுட் காலம் முடிவுக்கு வருகின்ற நிலையில் அதனை கலைப்பதற்கான முழுமையான அதிகாரம் நாளை ஜனாதிபதிக்கு கிடைக்கின்றது.

அதன்பிரகாரம் நாளை (திங்கட்கிழமை) நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு அடுத்த மாதம் பொதுத்தேர்தல் இடம்பெறும் என  அறிய முடிகின்றது.

அந்தவகையில் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான உத்தரவை பிறப்பிப்பார் என இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

மேலும் "நாடாளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானி அறிவிப்பு திங்கட்கிழமைக்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கலாம். இது ஜனாதிபதியால் முடிவு செய்யப்பட்டுள்ளது" என கூறினார்.

இதற்கிடையில், தேர்தல் ஆணைக்குழுவில் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, நாடாளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானி அறிவிப்பில் பொதுத் தேர்தளுக்கான திகதியும் இருக்கும் என்று கூறினார்.

அந்தவகையில், "குறித்த வர்த்தமானி அறிவிப்பில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான திகதி, பொதுத் தேர்தல் நடைபெறும் திகதி மற்றும் புதிய நாடாளுமன்றம் ஆரம்பமாகும் திகதி ஆகியவை இருக்கும்" என மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

தேர்தல் சட்டங்களின்படி, நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட 55 முதல் 66 நாட்களுக்கு இடையில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதும், அமைச்சர்கள், பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரை மட்டுமே உள்ளடக்கிய காபந்து அரசாங்கம் நடைமுறைக்கு வரும்.

19 ஆவது அரசியலமைப்புக்கு அமைய இன்று நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் தற்போதைய நாடாளுமன்றத்தின் காலம் நான்கரை ஆண்டுகள் கடக்கின்ற நிலையில் அதனை கலைப்பதற்கான முழுமையான அதிகாரம் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிக்கு கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post