பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்ற 40 பேருக்கு கொரோனா; ஜேர்மனியில் புதிய சிக்கல்!!

ஜேர்மனியில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் பிராங்க்பர்ட்டில் உள்ள தேவாலயம் ஒன்றில் முன்னெடுக்கப்பட்ட பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் இதுவரை 1,77,850 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் சிகிச்சை பலனின்றி 8,216 பேர் உயிரிழந்துள்ளனர்.

எஞ்சிய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஜேர்மனியில் தான் கொரோனா தொற்றும், மரண எண்ணிக்கையும் குறைவாகப் பதிவாகியுள்ளது.

இதனால் அந்நாட்டில் படிப்படியாக ஊரடங்கைத் தளர்த்தும் முடிவை அரசு முன்னெடுத்தது.

இந்த நிலையில், ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் கடந்த 10 ஆம் திகதி பிராங்க்பர்ட்டில் உள்ள தேவாலயம் ஒன்றில் பிரார்த்தனை கூட்டம் நடந்தது.

அதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் அக்கூட்டத்தில் பங்கேற்ற, 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனால் அந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் தனிமைப்படுத்தவும், பரிசோனைக்கு உட்படுத்தவும் அரசு முடிவு செய்துள்ளது.

தென் கொரியாவில் ஒரு தேவாலயத்தில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் மூலமாகவே அங்கு அதிகப்படியானோருக்கு கொரோனா தொற்று பரவியது.

அதேபோல் ஜேர்மனியிலும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post