மட்டக்களப்பு – அம்பாறை கரையோரப்பகுதிகளில் கிணற்று நீர் வற்றியதினால் நேற்றிரவு மக்கள் மத்தியில் பதற்றம்!!

செ.துஜியந்தன்
மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மாவட்டங்களிலுள்ள கரையோரப்பிரதேசங்களில் நேற்றிரவு வீடுகளிலுள்ள சில கிணறுகளின் நீர் மட்டம் வற்றியதினால் மக்கள் மத்தியில் மிகுந்த அச்சம் ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து இங்குள்ள கடற்கரைப்பகுதியிலுள்ள மக்களில் முதியோர், சிறுவர்கள் பாதுகாப்பான இடம்தேடி பிரதான வீதிகளை நோக்கி சென்றதை காணக்கூடியதாக இருந்தது.

நேற்று இரவு ஏழு மணி தொடக்கம் மட்டக்களப்பின் கல்லாறு, கோட்டைக்கல்லாறு, களுவாஞ்சிகுடி போன்ற பகுதிகளிலும் அம்பாறைமாவட்டத்தின் பெரியநீலாவணை, மருதமுனை, பாண்டிருப்பு, கல்முனை உட்பட பல கிராமங்களில் சில கிணறுகளின் நீர் மட்டம் வெகுவாகக்குறைந்து மணல் தெரியக்கூடியளவிற்கு காட்சியளித்துள்ளது. இச் செய்தி மக்கள் மத்தியில் பரவியதையடுத்து இரவு 10 மணிக்குப்பின்னர் அனைவரும் பதற்றமடைந்தவர்களாக காணப்பட்டனர்.

பெரியகல்லாறு, கல்முனை பிரதேசங்களில் சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டுவிடுமோ என்ற பீதியில் மக்கள் நித்திரையின்றி விழித்திருந்தனர். கல்முனைப் பொலிஸார் வீதிpகளில கூடி நின்ற பொதுமக்களிடம் வதந்திகளை நம்பவேண்டாம் எனவும் எவரும் பதற்றம் அடையத்தேவையில்லை என்றும் அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தனர்.

நேற்றிரவு திடீரென நீர் மட்டம் குறைவடைந்த கிணறுகளில் இன்று காலை ஓரளவிற்கு மீண்டும் நீர்மட்டம் உயர்வடைந்திருந்ததையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது. தங்களுடைய கிணறுகளின் நீர் மட்டம் குறைவடைந்திருந்தமை தொடர்பாக பொதுமக்கள் சிலர் கருத்து தெரிவிக்கையில் கிணற்றின் நீர் வற்றிப்போய் மணல் தெரிந்ததாகவம் இதனால் பீதிக்குள்ளானதாகவும் கூறினார்கள்.

தற்போது நிலவும்மழையுடன் கூடிய கால நிலையினால் மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கிணறுகள் பொங்கி வழிவதும், சில கிணறுகளில் நீர் வற்றுவதும், கடல் நீர் உட்புகுவதும், இடையிடையே பலத்த காற்றும் மழை பெய்வதும் மக்களை அச்சமடைய வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post