தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பயிலுனர் செயற்திட்ட உதவியாளர் நியமனங்களை மீள வழங்குமாறு கோரிக்கை!!


தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பயிலுனர் செயற்திட்ட உதவியாளர் நியமனங்களை மீள வழங்குமாறு அகில இலங்கை பயிலுனர் செயற்திட்ட உதவியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமக்கு வழங்கப்பட்ட நியமனங்கள் இடை நிறுத்தப்பட்டமை தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் அமைச்சரவையில் அங்கீகாரம் பெற்று தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம் மற்றும் வடமாகாண அபிவிருத்தி, இளைஞர் விவகார அமைச்சின் கீழ் அதற்குப் பொறுப்பாக இருந்த அமைச்சரும், முன்னாள் இலங்கைப் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க வழிகாட்டலுடன் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு நாடு முழுவதும் பயிலுனர் செயற்திட்ட உதவியாளர் விண்ணப்பங்கள் கோரப்பட்டு பிரதமரின் அலரி மாளிகையில் ஆனி மற்றும் ஆவணி மாதங்களில் இரண்டு நேர்முகத் தேர்வுகள் இடம்பெற்று புரட்டாதி மாதம் 16ம் திகதி (2019.09.16) அகில இலங்கை ரீதியாக பயிலுனர் செயற்திட்ட உதவியாளர் நியமனங்கள் 6547 பேர் அளவில் கிடைக்கப்பெற்றன.

அதன் நிமித்தம் அனைவரும் தங்கள் மாவட்ட செயலகங்களுக்குச் சென்று வரவு இடாப்பில் கையொப்பம் இட்டோம். மாவட்ட செயலகங்களினால் அவரவரது பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டோம்.

பிரதேச செயலகங்களில் கையொப்பமிட்டு கடமைகளைப் பொறுப்பேற்றிருந்த நிலையில் 2019.09.18ம் திகதியன்று ஜனாதிபதித் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டிருப்பதைக் காரணமாகக் கொண்டு 2019.09.23ம் திகதியன்று தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் தற்காலிகமாக இந்நியமனங்கள் இடைநிறுத்தப்படுவதாக அனைத்து மாவட்ட செயலகங்களுக்கும் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டது.

ஆனால் 2019.09.18 தேர்தல் அறிவிக்கப்பட்ட திகதியாகவும், நியமனம் வழங்கப்பட்ட திகதி 2019.09.16 ஆகவும் அமைந்திருந்தமை இங்கு குறிப்பிடப்படல் வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்த பின்னர் 2019.11.18ம் திகதியன்று தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட எங்களது பணிகளைத் மீள தொடர்வதற்கு எங்களது மாவட்ட செயலகத்திற்குச் சென்றிருந்தோம். தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவரினால் எமது நியமனம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தற்காலிக தடையுத்தரவு நீக்கப்பட்டு மீண்டும் எமது பணியில் தொடர கடிதம் அனுப்பியிருந்தார். இருப்பினும், தற்போது அமைந்துள்ள அரசினால் நியமனம் பற்றி ஒரு தகவலும் வழங்கப்படவில்லை எனக் கூறப்பட்டது.

பின்னர் இந்நியமனத்தைத் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்வதாக நிதியமைச்சின் செயலாளரினால் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் பயிலுனர் செயற்திட்ட உதவியாளராகிய நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து நிதியமைச்சு, பிரதமர் காரியாலயம் மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பவற்றுக்குப் பல தடவைகள் சென்று பல கோரிக்கைக் கடிதங்களைக் கொடுத்து மீண்டும் எம்மைப் பணியில் அமர்த்துமாறு கோரியிருந்தோம். எமது கோரிக்கையை ஏற்று இது தற்காலிகமாகத் தான் இடைநிறுத்தப்பட்டன.

இதனை வழங்குவோம் என வாய் வார்த்தையாகத் தெரிவித்திருந்தனர். ஆனால் பல மாதங்கள் சென்றும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இறுதியாக எங்களுக்கு ஒரு இலட்சம் (100,000) வேலைவாய்பப்பின் கீழ் இந்த நியமனத்தைத் தருவதாகக் கூறினர். ஆனால் அதுவும் நடந்தபாடில்லை.

இந்த நியமனத்தை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் கடிதம் மூலமும், ஊடக சந்திப்புக்களின் மூலமும் அரசிற்கு வலியுறுத்தியிருந்தார். ஆனால், அரசு அதனைக் கண்டுகொள்ளவில்லை. இதனால் 6547 பேரின் வாழ்க்கை மிகவும் கவலைக்கிடமாகியுள்ளது.

சுமார் 08 மாதங்களாக வேலையின்றி தமது வாழ்வாதாரத்தை இழந்து நடுவீதியில் நிற்கின்றனர். முன்னர் செய்த தொழில்களும் இல்லை. இத் தொழிலும் கிடைத்தபாடில்லை. 6547 குடுமபங்களின் வாழ்க்கையும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

இந்நியமனம் கிடைத்தும் கடமைக்கு செல்வது இதுவரை எட்டாக் கனியாகவே உள்ளது. பல கடினமான செயற்பாடுகளை முன்னெடுத்தும் தற்போது உள்ள அரசிடம் ஆக்கபூர்வமான பதில் கிடைக்கவில்லை.

எனவே சாதகமான தீர்வு கிடைக்கவிட்டால் நாடுதழுவிய அகிம்சை வழியிலான போராட்டத்தை தொடர்வதோடு நடக்கவிருக்கின்ற பொதுத்தேர்தலை நாங்கள் அனைவரும் புறக்கணிப்போம் எனஎச்சரிக்கை விடுக்கின்றோம்.

எனவே இத்தொழிலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் எங்களினதும், எங்கள் குடும்பங்களினதும் எதிர்பார்ப்பு நிறைவேறும் வகையில் இதனை வழங்குமாறு அகில இலங்கைப் பயிலுனர் செயற்திட்ட உதவியாளர்கள் சார்பில் வேண்டி நிற்கின்றோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post