மாவீரர் தினத்தை ஒழுங்கமைத்து நடத்தியவர்களிடம் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு விசாரணை!!

கடந்த வருடம் (2019ஆம் ஆண்டு) நவம்பர் மாதம் 27 திகதி மன்னார் மாவட்டத்தில் ஆட்காட்டி வெளி மற்றும் பண்டிவிருச்சான் ஆகிய இரு மாவீரர் துயிலும் இல்லத்திலும் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளிகளுக்கு என மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

அதற்கு ஏற்பாடு மேற்கொண்டு நடாத்தியமை தொடர்பாக கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று புதன் கிழமை மன்னாரில் முக்கியஸ்தர்கள் இருவர் தனித்தனியாக இரண்டு மணி நேரம் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் மற்றும் மாவீரர்தின ஏற்பாட்டுக் குழுவின் முக்கியஸ்தரான ஞா.பிறேம்குமார் ஆகிய இருவருமே நேற்றைய தினம் புதன் கிழமை மன்னாரில் வைத்து விசாரணைக்குள்ளாகினர்.

கொழும்பில் இருந்து வருகை தந்த பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் சுமார் இரண்டு மணி நேரம் இவர்கள் இருவரும் தனித்தனியாக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

குறித்த விசாரணையின் போது புலிகள் இயக்கத்தினுடைய நிகழ்வை தொடர்சியாக அரசாங்கத்துக்கு எதிராக நடாத்தி வருகின்றமை தொடர்பாக வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தண்டனைக்குரிய குற்றம் எனவும் இனி வரும் நாட்களில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டால் உடனடியாக கைது செய்வோம் எனவும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த திடீர் விசாரணை மன்னாரில் உள்ள மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post